Published : 24 May 2021 06:25 PM
Last Updated : 24 May 2021 06:25 PM
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 375 பேருக்கு கரோனா பெருந்தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 2 நாட்கள் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் ஓரிரு நாளில் நோய்ப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது. நேற்று (மே 23) வரை 38,712 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில், 33,768 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 4,311 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைப் பலனின்றி இதுவரை 633 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அங்குள்ளவர்கள் வெளியே வரக்கூடாது என மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நோய்ப் பரவல் அதிகமுள்ள இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு மற்றும் நோய்த் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில், கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரத் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் இன்று (மே 24) தொடங்கியது. இதில், ஆர்வமுள்ள இளைஞர்கள் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களுக்கு வந்து கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் புதிதாக 375 பேருக்கு கரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வார பாதிப்பைக் காட்டிலும் குறைவு என்பதால், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில், கடந்த வார பாதிப்பு 700-ஐக் கடந்து பொதுமக்களை மிரட்டியது. நேற்று விடுமுறை தினம் என்பதால், சோதனைக் குறைவாகச் செய்யப்பட்டதால், நோய் பாதிப்பு குறைவாகப் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முழு ஊரடங்கை முன்னிட்டு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டன. அரசுப் பேருந்துகள் 50 சதவீதம் இயக்கப்பட்டதால், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நிறையப் பேர், வேலூர் மாவட்டத்துக்குள் வந்துள்ளதால் அடுத்து வரும் நாட்களில் நோய் பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும், மே 29 மற்றும் 31-ம் தேதிகளில் நோய்ப் பரவல் எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என, சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
வேலூர் மாநகராட்சிப் பகுதியில் மட்டும் 150 பேருக்கு இன்று நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் 100க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களைத் தொடர்ந்து தற்போது கிராமப் பகுதிகளிலும் நோய்ப் பரவல் அதிகரித்து வருகிறது.
வேலூர் மாநகராட்சி 60 வார்டுகளில் இதுவரை 2,200 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 1,400 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சுகாதாரத்துறை வழிகாட்டுதலின் பேரில் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள தெருக்களில் இரும்புத் தகடுகள் கொண்டு மூடப்பட்டுள்ளன. குடியாத்தம், பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் நோய்ப் பரவல் அதிகமாகக் காணப்படுவதால், அங்கு நோய்த் தடுப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தற்போதுள்ள சூழ்நிலையில் கரோனா பெருந்தொற்று ஏற்படாமல் இருக்கவும், உயிரிழப்புகளைக் குறைக்கத் தகுதியுள்ள அனைவரும் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT