Published : 24 May 2021 06:06 PM
Last Updated : 24 May 2021 06:06 PM

புதிய உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை இனி காண்பீர்கள்: கமல்ஹாசன் காணொலி பதில்

சென்னை

நாடோடிகள், யாத்ரீகர்கள் ஓரிடம் தங்க மாட்டார்கள். வணிகர்களாக அவர்கள் இருக்கும் பட்சத்தில் வியாபாரம் உள்ளவரை தங்குவார்கள். பிறகு அவர்கள் வெளியேறி விடுவார்கள் என வெளியேறியவர்களை விமர்சித்துள்ள கமல், உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன், அரசியல் உள்ளவரை மநீம இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், என்.ஜி.ஓக்களைச் சேர்ந்தவர்கள் எனப் பலர் இணைந்தனர். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகப் புதிய நேர்மையான அரசியல் என்று கமல் பேசினார். அவரது கட்சி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 3 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்றது.

அதன்பின்னர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்த கமலுக்கு நகர்ப்புற இளம் தலைமுறையினரிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியா, கூட்டணியா என்பதில் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. இதனால் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். வாக்குப் பதிவுக்குப் பின்னர் கமீலா நாசர் விலகினார். தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைக் கட்சி சந்தித்தது. கமல்ஹாசனும் தோற்றுப்போனார்.

தேர்தல் தோல்வியில் முதல் விக்கெட்டாக கமல் மீது விமர்சனத்தை வைத்து துணைத் தலைவரான மகேந்திரன் வெளியேறினார். கோழை, களையே தன்னைக் களையெடுத்துக்கொண்டது என்றெல்லாம் கமல் அவரை விமர்சித்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து சந்தோஷ் பாபு, பத்மபிரியா, முருகானந்தம் உள்ளிட்டோரும் விலகினர். அடுத்து குமரவேல் விலகினார்.

அடுத்தடுத்த தலைவர்கள் வெளியேறிய நிலையில் சர்வாதிகாரியாக கமல் செயல்படுகிறார், ஜனநாயகம் இல்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு கமல் மவுனமாகவே இருந்தார். இந்நிலையில் இன்று திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலியை வெளியிட்டுள்ளார்.

அவரது காணொலி பதிவு வருமாறு:

“மாற்றம் என்றும் மாறாது நிகழ்ந்துகொண்டே இருக்கும். அரசியல் மாற்றம் நாட்டில் ஏற்பட நாம் ஏற்றிய கொடி பறந்துகொண்டு இருக்கிறது. நேர்மை வழியில் மாற்றத்தைத் தேடுபவர்களாய் நாம் இருக்கும்வரை நம் கொடி புத்தொளியோடு பறந்துகொண்டே இருக்கும். மூச்சுள்ளவரை அதன் பாதுகாவலனாக நான் இருப்பேன். நான் ஒரு சிறு விதைதான்.

இந்த விதை, வீழ்ந்தது, வீழ்த்துவோம் என கொக்கரிக்கும் பழைய புள்ளிகளுக்கும், சுள்ளிகளுக்கும் ஒரு செய்தி. விதை விழுந்தாலும் மண்ணைப் பற்றிவிட்டால் அது காடாகும், நாளை நமதாகும். உயிரே, உறவே, தமிழே ஊரடங்கினாலும் வாயடங்காது என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றாக நாம் ஆகிவிடக்கூடாது.

தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றிப் பாடம் கற்பது நாம் இதுவரை கண்ட சரித்திரம். மக்களிடம் முக அறிமுகம் இல்லாதவர்களையும், சற்றே தெரிந்தவர்களையும் புது எழுச்சி அரசியலின் நட்சத்திரங்களாக மின்னவைக்க நான் நினைத்ததுதான் சிலருக்கு சர்வாதிகாரமாகத் தெரிகிறது. திறமையின் அடிப்படையில் பெரும் பொறுப்புகளைக் கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே தந்து வளர வழி செய்தது அன்று அவர்களுக்கு ஜனநாயகத்தின் உச்சகட்டமாகத் தெரிந்திருக்கிறது.

பிறகு காலச் சூழலில் கண்ணுக்கு ஏற்பட்ட மறதியில் அது அவர்களுக்குத் தெரியாமல் போய் விட்டது. கூட்டணி வைத்துக்கொள்வதில் நாம் காட்டிய வெளிப்படைத் தன்மையும், அதைத் தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு பொறுப்பு கொடுத்த ஜனநாயகமும் அனைவரும் அறிந்தவை. தோல்விக்குப் பின் அவரவருக்கு இருக்கும் தார்மீகக் கடமையை ஏற்பது நல்ல ஜனநாயகவாதி செய்யும் செயல்.

கடமைகளை மறந்து நிகழ்ந்துவிட்ட தவறுகளைக் கொட்ட ஒரு குழி தேடுவது சிலருக்கு ஜனநாயகமாகப் படுகிறது. அது ஜனநாயகமே அல்ல. நம் மய்யக் கிணறு அவ்வளவு சாதாரணமாகத் தூர்ந்து போய்விடாது என்பது தற்காலிக தாக சாந்திக்காக குடிக்க வந்தவர்களுக்குப் புரியாது. 40 ஆண்டு காலம் இறைத்த நீர் வார்த்ததில் உடல் சற்றே வேர்த்தாலும், உற்சாக ஊற்று ஊறிக்கொண்டே இருக்கும் என்பது நமக்கு நம் அனுபவம் சொல்லும் பாடம்.

இதுதான் நம் புலம், இதுதான் நாம் செய்யப்போகும் விவசாயம் என்று களம் இறங்கிவிட்ட நமக்கு நம் நீர் நிலையைச் சுற்றித்தான் வேலை. நாடோடிகள், யாத்ரீகர்கள் அப்படி அல்ல ஓரிடம் தங்க மாட்டார்கள். வணிகர்களாக அவர்கள் இருக்கும் பட்சத்தில் வியாபாரம் உள்ளவரை தங்குவார்கள். பிறகு அவர்கள் வெளியேறி விடுவார்கள், சில நேரம் சென்றவழியே திரும்ப வருவார்கள்.

இந்த ஊற்று அன்றும் சுரந்துகொண்டு இருக்கும், ஆனால், மீண்டும் இவர்கள் இந்த ஊருணியை நம் நீர் நிலையை அவர்கள் அசுத்தப்படுத்த விடமாட்டோம் என்கிற உறுதியுடன் நாம் நம் பணியை நேர்மையாகத் தொடரவேண்டும். அதுவே நாம் தரும் செய்தியாக உலகம் அறியவேண்டும். மற்றபடி தன் தவறுகளை மறைக்க சிலர் எழுப்பும் பொய்க் குற்றச் சாட்டுகளுக்கு நாம் பதில் சொல்லவேண்டியதில்லை. காலம் அதற்கு பதில் சொல்லும்.

உண்மையெல்லாம் தெரிந்தும் ஊமையாக இருக்கச் சொல்கிறீர்களா என வெகுண்டு, குரலெழுப்பும் தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். உயிரே உண்மை பேசு, உறவே வாதாடு, என் அருமை தமிழே போதும் அதற்கு. மறந்தும் நம் மொழி மாசுபடாது இருக்கட்டும். நம் தரம் குறையாது இருக்கட்டும். கட்சி உள் கட்டமைப்பை தனி மனிதர்கள் தன் ஆதாயத்துக்காக மாற்றி ஆடிய விளையாட்டுகள் இனி தொடராது.

செயல் வீரர்கள், செயலாற்றுபவர்களின் கரங்கள் வலுப்படுத்தப்படும். உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை அனைவரும் இனி காண்பார்கள். நம் கொள்கையில் என்றும் ஒரு தெளிவும், பாதையில் நேர்மையும் இருப்பதால் நம் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது. என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யமும் இருக்கும். உங்கள் நான்”.

இவ்வாறு கமல்ஹாசன் காணொலியில் பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x