Published : 24 May 2021 05:52 PM
Last Updated : 24 May 2021 05:52 PM
கரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியை, அரசியல் நிகழ்வாக மாற்றக் கூடாது எனவும், ரேஷன் கடைகளில் ஆளுங்கட்சி சின்னம் இடம் பெறக் கூடாது எனவும், தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுகவைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ''கடந்த ஜனவரி மாதம் முந்தைய அதிமுக அரசால் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்கியபோது, அதற்கான டோக்கன்களை அரசியல் கட்சியினர் வழங்கக் கூடாது எனவும், நியாய விலைக் கடைகளில் கட்சி சார்பில் பதாகை வைக்கக் கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை மீறும் வகையில், தற்போது கரோனா நிவாரண நிதி 2,000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சிகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், நியாய விலைக் கடைகளுக்கு அருகே சாலையோரம் திமுகவினர் பேனர்கள் வைத்திருப்பதால், அரசு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் ஆளும் கட்சியினர் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும். நியாய விலைக் கடை அருகே ஆளும் கட்சியினர் விளம்பரப் பலகை வைக்கத் தடை விதித்த உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு முன் இன்று (மே 24) விசாரணைக்கு வந்தபோது, நிவாரண உதவி வழங்கப்படும் ரேஷன் கடைகளில் உதயசூரியன் சின்னம் இடம்பெற்றுள்ளதாகவும், முதல்வரின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், தேர்தல் அறிவிக்கப்பட இருந்த நேரத்தில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டதால், அங்கு அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது எனவும், பேனர்கள் வைக்கக் கூடாது எனவும், வழக்குத் தொடரப்பட்டதாகவும், தற்போதைய நிலையும், அப்போதைய நிலையும் வெவ்வேறு எனவும் சுட்டிக்காட்டி வாதிட்டார்.
''நிவாரண உதவி வழங்கும் போது, அரசு மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டுமே தவிர, ஆளுங்கட்சியை முன்னிலைப்படுத்தக் கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் படம் ரேஷன் கடைகளில் இடம் பெறுவது தவறில்லை. ஆளுங்கட்சி சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது'' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், நிவாரணம் வழங்குபவர்கள், இந்நிகழ்ச்சியை அரசியல் நிகழ்வாக மாற்றக் கூடாது எனவும், அரசியல் சாயம் கொடுக்கக் கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், நிவாரண உதவிகள் வழங்கும்போது கரோனா தடுப்பு விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT