Published : 24 May 2021 02:42 PM
Last Updated : 24 May 2021 02:42 PM
தமிழகம் முழுவதும் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 890 மருத்துவமனைகள் இயங்குகின்றன. இவற்றில் காப்பீடு சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட மருத்துவமனை, சிகிச்சைக்காக ஒதுக்கப்படும் தொகை குறித்து போர்டு எழுதிவைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் இன்று புதிய ஆக்சிஜன் படுக்கைகளைத் தொடங்கி வைத்தபின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனா சிகிச்சைக்கு இலவச சிகிச்சை பெறும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிகிச்சைக்குக் கட்டணம் என்ன என்பதைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 890 மருத்துவமனைகள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட வாரியாக உள்ள 890 மருத்துவமனைகளிலும் பொதுமக்களுக்கு எந்த மருத்துவமனையில் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது என்கிற விவரத்தையும், கட்டணத்தையும் குறிப்பிட்டு போர்டு எழுதி வைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசின் சார்பில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தனியார் மருத்துவமனை கட்டணம் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வசூலிப்பதாக புகார் வந்தால் மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலக அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
முதல் அலையில் 13% வரை தடுப்பூசிகள் வீணாகியுள்ளன. ஆனால், சமூக வலைதளங்களில் 7 லட்சம் தடுப்பூசிகளை அரசு கையில் வைத்துக்கொண்டு போடாமல் வைத்துள்ளது என்று தவறான செய்தியைப் பரப்புகிறார்கள்.
தமிழக அரசிடம் 2 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன. அதையும் மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பியுள்ளோம். முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகளைப் பயன்படுத்துகிறோம். பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்துக்கு வரும் தடுப்பூசி எண்ணிக்கை குறைவுதான்”.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT