Published : 24 May 2021 02:32 PM
Last Updated : 24 May 2021 02:32 PM
ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் காவல்துறை மற்றும் வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அரக்கட்டளை சார்பில் ‘பசிக்கிறதா- எடுத்துக் கொள்ளுங்கள்’ என்ற உணவு குடில் அமைக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் பசியை போக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த உணவுக் குடில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் எஸ்பி பேசும்போது, “ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய மக்கள், பசித்தோர் இலவசமாக சாப்பிடும் விதத்தில் கடையநல்லூர் காவல் துறை சார்பில் இலவசமாக காலை, மதியம், இரவு மூன்று நேரங்களிலும் இங்கே இலவசமாக உணவு ஏற்பாடு செய்ய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வந்து உள்ளது.
ஊரடங்கு முடிந்த பின்னரும் இதனைத் தொடர்ந்து செயல்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் உறுதி அளித்துள்ளனர். எனவே இப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றி வரிசையாக வந்து எடுத்துச் செல்லலாம்” என்றார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் எஸ்பி கூறும்போது, “வெளிமாவட்டங்களில் இருந்து தென்காசி மாவட்டத்துக்கு வருபவர்களை கண்காணிக்க 9 இடங்களில் சோதனைச்சாவடிகள் உள்ளன. தற்போது ஒரு காவல் நிலைய எல்லையில் இருந்து இன்னொரு காவல் நிலயை எல்லைக்கு அநாவசியமாக செல்வதைத் தடுக்க கூடுதலாக 24 சோதனைச்சாவடிகள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு காவல் நிலையத்தில் இருந்து வேறொரு காவல் நிலைய எல்லைக்கு செல்ல வேண்டும் என்றால் உரிய அனுமதி பெற்று இருக்க வேண்டும்.
ஒரு காவல் நிலைய எல்லையில் இருந்து மற்றொரு காவல் நிலைய எல்லைக்கு தேவை இல்லாமல் வாகனங்களில் சுற்றித் திரிந்தால் இதுவரை அபராதம் விதிக்கப்பட்டது.
இனி வழக்கு பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கு பதிவு செய்யப்பட்டால் அது சம்பந்தப்பட்டவர்கள் வேலைக்குச் செல்லும்போது பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். எனவே, அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே வர வேண்டாம்.
மருத்துவத் தேவை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதிக்கப்படும். அவசர காலங்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாகனங்கள் தேவைப்பட்டாலும் சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளரின் வாகனம் மூலம் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனாவை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT