Published : 24 May 2021 03:12 AM
Last Updated : 24 May 2021 03:12 AM
பொதுமக்களிடம் தடுப்பூசி குறித்த அச்சம் நிலவுவதாலும் மாவட்டங்களில் தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருப்பதாலும் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணா மலை மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், 90 சதவீதம் பேர் தடுப்பூசியை போட்டுக்கொண்டால் மட்டுமே அடுத்தடுத்த கரோனா அலைகளை தடுக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் கரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. முதற் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தொடர்ந்து, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட, இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. மேலும், சிறப்பு முகாம்கள்நடத்தப்பட்டு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி அதிகரிக்கப்பட்டது.
புதுடெல்லி மற்றும் மகராஷ்டிரா மாநிலத்தில் பரவிய கரோனா இரண்டாம் அலையின் பாதிப்பை பார்த்த பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டத் தொடங்கினர். கையிருப்பில் இருந்த தடுப்பூசிகள் குறைய ஆரம்பித்த நேரத்தில் தமிழகத்தில் இரண்டாம் அலை வேகமாக பரவத் தொடங்கியது.
அதேநேரம், மாநில மற்றும் மாவட்ட அளவிலான தடுப்பூசி ஒதுக்கீடு குறைய ஆரம்பித்ததால் தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாவட்ட அளவில் கடந்த 20 நாட்களாக தலா 3 ஆயிரத்துக்கும் குறைவாகவே தடுப்பூசி கையிருப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
பின்தங்கிய 3 மாவட்டங்கள்
தமிழக அளவில் முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி போடும் பணியில் கடந்த 19-ம் தேதி நிலவரப்படி வேலூர் மாவட்டம் மாநில அளவில் நான்காவது இடத்தில் உள்ளது. 16 லட்சத்து 14 ஆயிரத்து 242 மக்கள் தொகை கொண்ட மாவட்டத்தில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 851 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், முதல் டோஸ் தடுப்பூசியாக ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 296 பேருக்கும் (8.6 சதவீதம்), இரண்டாம் டோஸ் தடுப்பூசியாக 49,555 பேருக்கும் (3.1 சதவீதம்) போட்டுள்ளனர்.
அதேநேரம், மாநில அளவில் திருப் பத்தூர் மாவட்டம் 11-வது இடத்திலும், ராணிப்பேட்டை மாவட்டம் 28-வது இடத்திலும், திருவண்ணாமலை மாவட்டம் 37-வது இடத்திலும் உள்ளது. 24 லட்சத்து 64 ஆயிரத்து 875 மக்கள் தொகை கொண்ட தி.மலை மாவட்டத்தில் முதல் டோஸ் தடுப்பூசியை 44,018 பேரும் (1.8 சதவீதம்), இரண்டாம் டோஸ் தடுப்பூசியை 16,796 பேர் (0.7 சதவீதம்) பேர் என மொத்தம் 60,814 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட மக்கள் தொகை 11 லட்சத்து 11 ஆயிரத்து 812 பேர் என்ற நிலையில் மொத்தம் 77,327 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில், முதல் டோஸ் தடுப்பூசியை 58,354 பேரும் (5.2 சதவீதம்), இரண்டாம் டோஸ் தடுப்பூசியை 18,973 பேரும் (1.7 சதவீதம்) போட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் தொகை 12 லட்சத்து 10 ஆயிரத்து 277 பேர் என உள்ளது. இதில், முதல் டோஸ் தடுப்பூசியை 43,166 பேரும் (3.6 சதவீதம்), இரண்டாம் டோஸ் தடுப்பூசியை 11,997 பேர் (1 சதவீதம்) போட்டுள் ளனர்.
விழிப்புணர்வு குறைவு
கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள் வதில் நகர் பகுதிகளைக் காட்டிலும் கிராமப்புறங்களில் ஆர்வம் குறைவாக உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பொதுமக்களிடம் தடுப்பூசி குறித்த சந்தேகம் தொடர்கிறது. தற்போது, பயன்பாட்டில் உள்ள இரண்டு தடுப்பூசியில் எந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்பதிலும் குழப்பம் உள்ளது. தி.மலை மாவட்டத்தில் 800 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு முகாம் நடத்தினாலும் குறைவான மக்களே தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வருகின்றனர். நகரப் பகுதியில் ஓரளவுக்கு விழிப்புணர்வு இருந்தாலும் தடுப்பூசி தட்டுப் பாடு உள்ளது. ஏற்கெனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதுதான் இப்போதைக்கு சவாலான பணியாக உள்ளது. அதிகளவில் தடுப்பூசி வந்தால் மட்டுமே இலக்கை எட்ட முடியும் என அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
அலையை தடுக்கும் தடுப்பூசி
தடுப்பூசி பயன்பாடு குறித்து சிஎம்சி மருத்துவமனை பொது மருத்துவ பிரிவு மருத்துவர் ரம்யா அய்யாதுரையிடம் ‘இந்து தமிழ் திசை’ சார்பில் கேட்டதற்கு, ‘‘கரோனா தொற்று சாதாரண, மிதமான, வீரியமான தொற்றாக பரவி வருகிறது. தற்போது, 50 சதவீதம் பேருக்கு வீரியமான தொற்று பரவி வருகிறது. இதை தடுப்பூசியால் மட்டுமே தடுக்க முடியும். அதாவது, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 99.9 சதவீதம் ஐசியு சிகிச்சை தேவைப்படாது.
தற்போதுள்ள தடுப்பூசிகள் கரோனாவுக்கு எதிராக 70 முதல் 90 சதவீதம் வரை சிறப்பாக செயல்படுகிறது. மக்கள் தொகையில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே அடுத்தடுத்து வரவுள்ள கரோனா அலைகளை தடுக்க முடியும். தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு அவர்களின் உடலில் ஏற்கெனவே உள்ள பிரச்சினைகள் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது’’ என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT