Published : 23 May 2021 08:22 PM
Last Updated : 23 May 2021 08:22 PM

தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது என்றே அமைச்சர் பொன்முடி சொன்னார்: சர்ச்சைகளுக்கு அரசு விளக்கம்

"தமிழகத்திற்கு நீட் (NEET ) தேர்வு கூடாது என்றும், வழக்கம் போல பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு சேர்க்கை நடைபெற வேண்டும்" என்றே உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார் எனத் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

முன்னதாக இன்று (23.5.2021) மத்திய அரசின் பள்ளி கல்வித் துறை (CBSE) முறையில் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு குறித்து அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு தமிழகத்தின் நிலைப்பாட்டைத் தெரிவித்து இருந்தனர்.

மருத்துவப் படிப்பில் மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் நடத்தலாம், மாநில அரசு இடங்களுக்கு நீட் கூடாது, அதற்கு மாநில அரசே நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ளும் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறியதாகத் தகவல் வெளியானது.

இதற்கு பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் கிளம்பின.

இந்நிலையில், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு குறித்த மாநிலக் கல்வி அமைச்சர்களுக்கான கூட்டம் குறித்து அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அதில், "மத்திய அரசின் பள்ளிக் கல்வித்துறை CBSE முறையில் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு குறித்து அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில அளவில் நடைபெறும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் குறித்தும், அதற்குப் பிறகு மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவிவரும் இக்காலகட்டத்தில் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் நடத்தும் முறைகள் குறித்து தமிழக அரசின் கருத்துகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எடுத்துரைத்தார்.

மேலும் தமிழக அரசின் இறுதி நிலைப்பாட்டை முதல்வருடன் கலந்து ஆலோசித்து மத்திய அரசிற்கு தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

இக்கூட்டத்தில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர், தமிழகத்திற்கு நீட் (NEET ) தேர்வு கூடாது என்றும், வழக்கம் போல பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

உயர்கல்வித் துறை அமைச்சரின் இக்கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, தமிழக அரசு தனியே நீட் தேர்வை மாநில அளவில் நடத்த இருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

இது முற்றிலும் தவறானது ஆகும். தமிழகத்தில் நீட் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறக் கூடாது என்பது மட்டுமல்லாது, மாணவர்கள் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x