Published : 23 May 2021 07:58 PM
Last Updated : 23 May 2021 07:58 PM
கொடைக்கானலில் இரண்டாவது ஆண்டாக கரோனா பெருந்தோற்று காரணமாக ஆண்டுதோறும் மே மாதம் இறுதி வாரத்தில் நடைபெறும் கோடை விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக பராமரிக்கப்பட்ட மலர்செடிகள் பூத்துக்குலுங்கியபோதும் ரசிப்பதற்கு சுற்றுலா பயணிகள் இல்லாத நிலை உள்ளது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனில் நிலவும் ரம்மியமான காலநிலையில். தழுவிச் செல்லும் மேகக்கூட்டங்கள், பசுமைப்போர்த்தியது போல் காட்சியளிக்கும் மலைமுகடுகளையும், சுற்றுலாத்தலங்களையும் காண தமிழகம் முழுவதிலும் இருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகளின் வருகைதருவர்.
கொடைக்கானல் மலைப்பகுதியே கோடை சீசனில் களைகட்டும். சுற்றுலாபயணிகளை மகிழ்விக்க அரசு கோடைவிழா, மலர்கண்காட்சி ஆகியவற்றை கோடைவிடுமுறை முடியும் முன்பாக மே இறுதி வாரத்தில் ஆண்டுதோறும் நடத்தும். இதில் சுற்றுலாபயணிகள் பங்கேற்கும் வகையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், படகு போட்டி, படகில் இருந்தபடி வாத்து பிடிக்கும்போட்டி, படகு அலங்கார அணிவகுப்பு என பல்வேறு போட்டிகள் பத்த நாட்கள் நடைபெறும்.
இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு கோடை சீசன் தொடங்குவதற்கு முன்னரே மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அறிவித்ததால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு கோடை விழா, மலர்கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.
கரோனா தொற்றின் முதல் அலையின் தாக்கம் குறைந்து சற்று சகஜ நிலைக்கு திரும்பியதால் ஓரிரு மாதங்கள் மட்டும் சுற்றுலாபயணிகள் இ பதிவு முறையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இரண்டாவது அலை காரணமாக தற்போது தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு கொடைக்கானலில் கோடைவிழா, மலர் கண்காட்சி நடைபெறுவது இரண்டாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் சுற்றுலாபயணிகளை அதிகம் கவரும் பிரையண்ட் பூங்கா, ரோஸ்கார்டன் ஆகியவற்றில் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. அதை கண்டு ரசிக்கத்தான் சுற்றுலாபயணிகள் இல்லாத நிலை உள்ளது.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக கோடை மழை தொடர்ந்து பெய்துவருவதால் தற்போது இதமான தட்பவெப்பநிலை நிலவுகிறது. அதிகபட்சமாக பகலில் 19 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக இரவில் 13 டிகிரி செல்சியசும் நிலவி ரம்மியமான சூழல் காணப்படுகிறது.
காற்றில் 72 சதவீதம் ஈரப்பதமும் உள்ளதால் குளுமை உணரப்படுகிறது. இந்த ஆண்டு கொடைக்கானலின் குளுமையை அனுபவிக்க முடியாத நிலையில் சுற்றுலா பயணிகள் உள்ளனர். ஆனால் சுற்றுலாபயணிகளை நம்பியுள்ள கொடைக்கானல் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT