Published : 23 May 2021 01:34 PM
Last Updated : 23 May 2021 01:34 PM

ஒன்றரை நாள் எல்லாக் கடைகளும் திறப்பு; பேருந்துகள் இயக்கம்: எப்படி அனுமதித்தார்கள்? டிடிவி தினகரன் கேள்வி

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கடந்த ஆட்சியாளர்கள் செய்த அதே தவறுகளை தற்போதைய தமிழக அரசும் செய்வது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கூடவே, கரோனா உச்சம் பெரும் சூழலில் ஒன்றரை நாட்கள் எல்லாக் கடைகளையும் எப்படித் திறக்க அனுமதித்தார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகம் முழுவதும் கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது கரோனா பாதிப்பு இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சமும் கவலையும் ஏற்படுகிறது.

நோயின் பாதிப்பு அதிகமாகிறது என்று சொல்லிவிட்டு, எல்லாக் கடைகளையும் ஒன்றரை நாள் முழுமையாக திறக்க எப்படி அனுமதித்தார்கள்?
சிறப்புப் பேருந்துகளை இயக்கும் அவசர முடிவை எடுத்தது ஏன்? நகரங்களில் இருக்கும் அதிக பெருந்தொற்று பாதிப்பு எல்லா ஊர்களுக்கும் பரவி விடாதா? ஏற்கனவே காலை 10 மணி வரை கடைகள் திறந்து இருந்த நிலையில், அதன் பிறகு அவசியமின்றி வெளியில் வந்தவர்களை முழுமையாக கட்டுப்படுத்தாமல்

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சரியான திட்டமிடுதல் இன்றி இப்படி குழப்புவது ஏன்? கடந்த ஆட்சியாளர்கள் செய்த அதே தவறுகளை தற்போதைய தமிழக அரசும் செய்வது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை

இதன் பிறகாவது ஆட்சியாளர்கள் பொறுப்போடு நடந்து கொள்வார்களா? மக்களும் மிகுந்த கவனத்தோடு நடந்துகொண்டு தாங்களும் பாதிக்கப்படாமல், மற்றவர்களும் பாதிப்படைவதற்கு காரணமாகிவிடாமல் இருந்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று, அரசு அறிவிப்பு வெளியான பின்னரே கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று தொடங்கி தற்போது வரை மக்கள் கட்டுக்கடங்காமல் வெளியில் சென்று வருகின்றனர்.

அவசியமில்லாவிட்டாலும் வெளியே சுற்றுபவர்களால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கவே வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x