Published : 23 May 2021 01:12 PM
Last Updated : 23 May 2021 01:12 PM
புதுச்சேரியில் வரும் மே 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுவையில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த 10ம் தேதி முதல் நாளை (மே 24) வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதியம் 12 மணிக்கு மேல் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாக தொடர்ந்து புகார் வந்தது.
இதனைக் கட்டுப்படுத்த போலீஸார் நாள்தோறும் அபராதம் விதிக்கின்றனர். விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்கும் பதிவு செய்கின்றனர்.
கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள கரோனா நோயாளிகள் சகஜமாக நடமாடுவதாக புகார் வந்தது. வீட்டு தனிமையில் உள்ள நோயாளிகள் வெளியே நடமாடினால் ரூ.1000 அபராதம் விதிக்க சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 15ம் தேதி கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு காலை 10 மணியுடன் கடைகளை அடைக்கும்படி உத்தரவிடப்பட்டது. ஆனால் புதுவையில் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை.
தமிழகத்தில் நாளை முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. பால், பத்திரிகை, மருந்தகம் தவிர அத்தியாவசிய கடைகள் அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களின் தேவைகளான காய்கறிகளை வீட்டுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தின் அருகாமையில் உள்ள புதுவையில் என்ன மாதிரியான ஊரடங்கு இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நிலையில் மே 31ம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு புதுவையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து ஆளுநர் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுபற்றி ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"புதுவையில் தளர்வுகளுடன் கூடிய பொது அடைப்பு மே 24ம் தேதி வரை அமலில் உள்ளது. அத்தியாவசிய சேவை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை மக்கள் இடைவெளி விட்டு வாங்கிச்செல்லும் அளவுக்கு மதியம் 12 மணி வரை கடைகள் இயங்குகின்றன.
மக்களுக்கு தினமும் காய்கறி, பழங்கள் உட்பட சத்தான உணவுகள் கரோனா நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவை என்பதாலும், மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில்கொண்டு கடைகள் 12 மணி வரை திறக்கப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி மக்கள் கூட்டம் கூடாமல் இடைவெளி விட்டு கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்றி வாங்கிச்செல்ல வேண்டும். பால், மருந்து போன்றவை தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேவையான அத்தியாவசிய பொருட்களை தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கடைகளில் வாங்கி அதிக தூரம் சாலையில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் நலன் கருதியே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. இதனால் கரோனா தாக்கம் சற்றே குறைய ஆரம்பித்துள்ளது.
இது பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் நடைபெற முடியாது. எனவே பொதுமக்கள் துணையோடு, ஏற்கெனவே உள்ள நடைமுறையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 31ம் தேதி வரை தொடரும். நிலைமையை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மறு ஆய்வு செய்யப்படும். விரிவான அரசாணை வெளியிடப்படும்." என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT