Last Updated : 23 May, 2021 05:52 AM

 

Published : 23 May 2021 05:52 AM
Last Updated : 23 May 2021 05:52 AM

கோடை காலங்களில் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறையை போக்க மர இலையை வழங்கலாம்: திருப்பத்தூர் கால்நடை மருத்துவர் அன்புசெல்வம் ஆலோசனை

திருப்பத்தூர்

கோடை காலத்தில் மனிதர்களுக்கு உடல் வெப்பத்தால் உணவு உட்கொள்ளுவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். அதே போல, கால்நடைகளுக்கு கோடைகாலத்தில் தீவன பற்றாக்குறை ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். இதனால், கால்நடை வளர்ப்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதம் வரை தீவனத்துக்காக திண்டாடும் நிலை உருவாகும். இதனால், பால் உற்பத்தி குறைந்து கால்நடை வளர்ப்போரின் வருவாய் குறைய வாய்ப்புள்ளது.

எனவே, கோடை காலங்களில்பசுந்தீவனங்களுக்கு மாற்றாக மர இலைகளை மாடுகளுக்கு உணவாக வழங்கலாம், மர இலைகளில் உள்ள ஊட்டச்சத்துகள் வறட்சியினால் எப்போதும் பாதிக்கப்படுவதில்லை என்பதால் அவற்றை கால்நடைகளுக்கு தயங்காமல் வழங்கலாம் என திருப்பத்தூரைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் அன்புசெல்வம் தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து கால்நடை மருத்துவர் த.அன்புசெல்வம் ‘இந்து தமிழ் நாளிதழிடம்’ கூறும்போது, ‘‘கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தக்கூடிய மர இலைகளை 6 வகையாக பிரிக்கலாம்.அதில், வாகை இலைகள், அகத்தி இலைகள், வேம்பு இலைகள், சவுண்டல் அல்லது சூபாபுல் இலைகள், கிளைரிசிடியா இலைகள், கல்யாண முருங்கை மரங்களின் இலைகள் சிறந்த பசுந்தீவனமாக கருதப்படுகிறது.

பொதுவாக மர இலைகளில் 10 முதல் 15 சதவீதம் புரதச்சத்தும், 40 முதல் 65 சதவீத மொத்தம் செரிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சூபாபுல், அகத்தி போன்ற மர இலைகளில் 20-ல் இருந்து 25 சதவீதம் புரச்சத்து உள்ளது. மர இலைகளின் மூலம் உயிர்ச்சத்து வைட்ட மின் ‘ஏ’ கால்நடைகளுக்கு கிடைக்கிறது.

மர இலைகளில் பொதுவாக சுண்ணாம்புச்சத்து மிக அதிகமான அளவிலும் மணிச்சத்து மிக,மிக குறைவான அளவிலும் இருப்பதால் மணிச்சத்து அதிகமாக உள்ள அரிசி, கோதுமை, தவிடுகளை மர இலைகளுடன் சேர்த்து அளிப்பதால் மணிச்சத்து குறைப் பாட்டினை தவிர்க்கலாம்.

ஊட்டச்சத்து மிகுந்த மர இலைகளைசில கால்நடைகளே உண்ணத் தயங்கும், மர இலைகளை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்த ஒரு சில வழிமுறைகளை கையாள வேண்டும். அதாவது, மர இலைகளை தீவனமாக வழங்கும் போது சிறிய அளவில் கொடுத்து முதலில் பழக்கப்படுத்த வேண்டும்.

மர இலைகளை பிற தீவன புற்களுடன் சேர்த்து வழங்கலாம். மர இலைகளுடன் வைக்கோல், சோளத்தட்டை, கம்பந் தட்டை, கேழ்வரகு தட்டை, கோதுமை தட்டையுடன் சேர்த்து வழங்கலாம்.காலையில்வெட்டிய இலைகளை மாலை வரையும், மாலையில் வெட்டிய இலைகளை அடுத்த நாள் காலை வரை வாட வைத்து அவற்றை வழங்கலாம். மர இலைகளை காய வைத்து அவற்றின் ஈரப்பதத்தை சுமார் 15 சதவீதம் கீழே குறைப்பதன் மூலம் நீண்ட நாட்கள் சேமிக்கலாம்.

இதன் மூலம் நச்சுப்பொருட்களின் அளவும் குறையும். அதேபோல, மர இலைகள் மீது 2 சதவீதம் உப்பு கரைசலை தெளித்து வழங்கினால் உப்பு சுவையால் மரத்தின் இலைகளை கால்நடைகள் அதிகமாக உண்ணும். மேலும், மர இலைகள்மீது வெல்லம் கலந்த நீரையும் தெளித்துஅதையும் வழங்கலாம். பொதுவாககால்நடைகள் ஒரே வகையான மர இலைகளை எப்போதும் விரும்பாது. ஒவ்வொரு முறையும் வெவ்வேறான இலைகளை கால்நடைகளுக்கு வழங்குவது சிறந்ததாகும்.

கறவை மாடுகளுக்கு தினந்தோறும் 8 முதல் 10 கிலோ வரை மர இலைகளை தீவனமாக வழங்கலாம். வெள்ளாடு களுக்கு 3 முதல் மூன்றரை கிலோ அகத்தி இலைகளை வழங்கலாம். செம்மறி ஆடுகளுக்கு 0.5 முதல் 2 கிலோ வரை அகத்தி இலைகளை வழங்கினால் ஆட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். மர இலைகளை முழுமையாக பசுந்தீவனத்துக்கு மாற்றான தீவனம் என கருதி அதையை தொடர்ந்து வழங்குவது நல்லதல்ல.

அதேபோல, கோடை காலங்களில் மர இலைகளை தவிர கால்நடைகளுக்கு வேறு தீவனங்களும் வழங்கலாம், அதாவது,வாழைக்கன்று, தென்னை ஓலை, மரவள்ளிக்குச்சி ஆகியவற்றையும் வழங்கலாம். குறிப்பாக, வாழைக்கன்று மற்றும் மரவள்ளிக்குச்சியை சினை மாடுகளுக்கு வழங்கக் கூடாது.தென்னை ஓலைகளை குறைந்த அளவே வழங்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x