Published : 23 May 2021 05:30 AM
Last Updated : 23 May 2021 05:30 AM
சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருந்தால் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பை தவிர்க்கலாம் என கோவையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.
‘மியூகோர்மைகோசிஸ்’ (Mucormy cosis) எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று என்பது புதிய தொற்று இல்லை. கரோனா
தொற்று பரவத் தொடங்குவதற்கு முன்பிருந்தே அதனால் பாதிக்கப்படுவோர் இருந்து வந்தனர். குறிப்பாக கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு உள்ளவர்கள், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தப் புற்றுநோய் உள்ளவர்கள், தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் இந்த பாதிப்பு ஏற்பட்டு வந்தது. மிகக் குறைவான நபர்களே இந்த பூஞ்சையால் பாதிக்கப்பட்டனர். ஆனால், கடந்த சில நாட்களாக தினமும் பலர் பாதிக்கப்பட்டு வருவதால், கருப்புபூஞ்சை தொற்று பேசும் செய்தியாகியிருக்கிறது.
இதுதொடர்பாக கோவை நீலம்பூர் ராயல்கேர் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.சொக்கலிங்கம் கூறியதாவது:
கரோனா தொற்றின் தாக்கம் முதல் அலையைவிட, இரண்டாம் அலையில் அதிகமாக உள்ளது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அதிகமான ஸ்டிராய்டு மருந்துகள், நோய் எதிர்ப்புத் திறனில் மாறுதல் ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. நுரையீரலில் அதிக பாதிப்பு ஏற்படுவதால் தீவிரசிகிச்சைப் பிரிவு, ஆக்சிஜன் படுக்கைகளில் நீண்ட நாட்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கரோனாவின் கூடுதல் வீரியம், அதற்கேற்ப சிகிச்சையின்போது அளிக்கப்படும் மருந்துகள் என இரண்டும் இணைந்து நோய் எதிர்ப்பு திறனை குறைப்பதால், இரண்டாவது அலையில் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை என்பது என்ன?
லட்சக்கணக்கான ஆண்டுகளாக நமது சுற்றுப்புறச் சூழலில் பூஞ்சைகள் உள்ளன. உடலில் மூக்கு, சைனஸ், காது, வாய், குடல் மற்றும் தோல் ஆகியவற்றில் பூஞ்சைகள் இயல்பாக வாழ்கின்றன. பூஞ்சைகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மனிதர்களிடம் நோய்எதிர்ப்பு அமைப்பு உள்ளது. இருப்பினும், இந்த அமைப்பு, பாதுகாக்கும் திறனை இழக்கும்போது, இந்த பூஞ்சைகள் சந்தர்ப்பவாதிகளாக மாறி, உயிருக்கு ஆபத்தான நோயை ஏற்படுத்துகின்றன. கருப்பு பூஞ்சை (mucor) என்பது பூஞ்சைகளில் ஒரு வகை ஆகும். நோய் எதிர்ப்பு சக்திகுறையும்போது, நாசித் துவாரம் வழியாகச் செல்லும் மியூக்கார் பூஞ்சைகள், சைனஸ் பகுதி, கண்கள், நுரையீரல் மற்றும் மூளைக்கு பரவுகின்றன.
அறிகுறிகள், சிகிச்சைகள்
கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், தலைவலி, முகம், கண்களில் வலி, வீக்கம், பார்வைக் கோளாறு, முகத்தில் உணர்வின்மை, மூக்கை சுற்றியுள்ள தோல் கருப்பாக மாறுவது, புண்கள் உருவாதல், இருமல், ரத்தம் கலந்த சளி, வாயின் மேல் அண்ணம் கருப்பாக மாறுதல், பல்வலி, பற்களில் தளர்வு ஆகியவை ஏற்படும். தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் உள்ளவர்கள், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
கருப்பு பூஞ்சையானது நாசித்துவாரம், சைனஸ் பகுதியில் உள்ள திசுக்களின் ரத்த ஓட்டத்தை குறைத்து, அந்த திசுக்களை அழுகச் செய்து, அதிலிருந்து வளர்ந்து பரவத் தொடங்குகிறது. எனவே, பூஞ்சையால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள அழுகிய திசுக்களை முழுமையாக அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும். அறுவை சிகிச்சை செய்தபின்னர், ஊசி மூலம் நரம்பு வழியாக பூஞ்சை எதிர்ப்பு மருந்து செலுத்த வேண்டும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை வாய் வழியாகவும் மருந்து உட்கொள்ள வேண்டும்.
கவனமாக இருக்கவேண்டியவர்கள்
கரோனா சிகிச்சையின்போது அதிக ஸ்டிராய்டு மருந்து எடுத்துக் கொண்டவர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் நீண்ட நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபிறகு முதல் 8 வாரங்கள் வரை, வாரம் ஒருமுறை மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மூக்கில் பூஞ்சை இருப்பதை தொடக்க நிலையில் கண்டறிந்தால், அதிக பாதிப்பு ஏற்படுவதையும், கண், மூளை, நுரையீரல், வாயின் மேல் அண்ணத்துக்கு பரவுவதையும் தவிர்க்கலாம்.
கருப்பு பூஞ்சை தொற்று என்பது சுற்றுச்சூழலில் இருந்து நேரடியாக தனிநபர்களைத் தாக்கி பாதிக்கும் தொற்று. ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் கரோனா தொற்று போன்றதல்ல. நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ள
வர்கள், கைகளை சரியாக கழுவாமல் மூக்கு, காது, கண் போன்றவற்றை தொடுவதால் தொற்று ஏற்படலாம்.
பூஞ்சை பாதிப்பை தவிர்க்க, தற்போதைய சூழலில் கரோனா தொற்று தாக்காமல் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்
டும். அதேசமயம், கரோனா பாதிப்பு வந்தாலே தொடர்ந்து இந்த பூஞ்சையும் தாக்கும் என்ற அச்சம் தேவையில்லை. கரோனாவில் இருந்து குணமடைந்த பிறகும் முதல் 8 வாரங்கள் வரை, வாரத்துக்கு ஒருமுறை மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அப்போது, சைனஸ் எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்துகொள்வதும் நல்லது.
சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நிறையபேர் துணியால் ஆன முகக் கவசங்களை துவைக்காமல் வாரக்கணக்கில் பயன்படுத்துவதும் தொற்றுக்கு ஒரு காரணமாகிறது. எனவே, துணியால் ஆன முகக்கவசங்களை பயன்படுத்தினால் சோப்பு போட்டு துவைத்து நன்றாக வெயிலில் காயவைத்து பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் முகக் கவசங்களையே பலர் வாரக்கணக்கில் பயன்படுத்துகின்றனர். அதுவும் தவறு.
இவ்வாறு அவர் கூறினார்.டாக்டர் பி.சொக்கலிங்கம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT