Published : 22 May 2021 08:49 PM
Last Updated : 22 May 2021 08:49 PM
ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த அரசு மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக தாம்பரம் காவல் நிலைய வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவர் சச்சின் என்பவரும், விழுப்புரம் காவல் நிலைய வழக்கில் விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவை கோபிநாத் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
30 வயதான இருவரின் மனுக்களும் நீதிபதி எஸ்.கண்ணம்மாள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, முன்ஜாமீன் வழங்க என்று அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இரு அரசு மருத்துவர்களின் முன்ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் 57 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் விஜய், தொல்காப்பியன், சரவணன் பழனி ஆகியோர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. இதில் முன்ஜாமீன் கோரி சரவணன் பழனி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மருந்து விற்பனைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை, யாரிடமும் பணம் வாங்கவில்லை என்றும், தன் செல்போன் நம்பரை புகார்தாரர் காவல்துறையில் கொடுத்ததால், இந்த வழக்கில் சேர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சரவணன் பழனிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT