Published : 22 May 2021 03:18 PM
Last Updated : 22 May 2021 03:18 PM
பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், எவை எவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பு:
“தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நோய்த் தொற்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நோய்த் தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்திருந்தாலும், நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக, இன்று (22.05.2021), அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் ஆகியோருடன் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த முழு ஊரடங்கு 24.05.2021 காலை முதல் நடைமுறைக்கு வரும். இந்த முழு ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
· மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகங்கள்.
· பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிகை விநியோகம்.
· பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.
· தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும்.
· தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரியக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
· மின்னணு சேவை (இ-காமர்ஸ்) காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்கலாம்.
· உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
Swiggy, Zomato போன்ற மின் வணிகம் ((e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்
· பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்
· ஏடிஎம் மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.
· வேளாண் விளைபொருட்கள் மற்றும் இடுபொருட்களைக் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
· சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.
· உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.
· மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.
· செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.
· தடையின்றித் தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும்.
பொது
* பொதுமக்கள் நலன் கருதி, இன்று (22-5-2021) இரவு 9-00 மணிவரையிலும், நாளை 23.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது”.
* வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்று (22.05.2021) மற்றும் நாளை (23.05.2021) தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
* மால்கள் திறந்திட அனுமதி கிடையாது.
கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும்.
மேலும், கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்”.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT