Published : 22 May 2021 03:13 AM
Last Updated : 22 May 2021 03:13 AM
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) அனுசரிக்கப்படவுள்ள நிலை யில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர் களது கல்வித் தகுதிக்கேற்ற புதிய பணி ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருப் பதற்கு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. வன்முறை மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து இன்றோடு (மே 22) மூன்று ஆண்டுகள் ஆகின்றன.
இந்த துயர சம்பவத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படவுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஒன்றை தமிழக அரசு நேற்று நிறைவேற்றியது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இறந்த நபர்களின் குடும்பத்தினர் மற்றும் பலத்த காயமடைந்தவர்கள் என, 21 பேருக்கு கடந்த அதிமுக ஆட்சியில் அரசு பணி வழங்கப்பட்டது. ஆனால், அனைவருக்கும் கிராம உதவியாளர் மற்றும் சமையலர் பணியே வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பு பெற்றவர்களில் பெரும்பாலான வர்கள் பட்டப்படிப்புக்கு மேல் படித்தவர்கள். அவர்களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வித்தகுதிக்கு ஏற்ப வேலை வழங்கப்படும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதன்படி மதுரையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பலத்த காயமடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கி, அதற்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.
ஏற்கெனவே பணி வழங்கப்பட்ட 21 பேரில் கிராம உதவியாளர் மற்றும் சமையலராக பணியாற்றி வந்த 17 பேருக்கு தற்போது அவர்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி மாற்றி வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பேரூராட்சித் துறையில் 16 பேருக்கு இளநிலை உதவியாளர் நிலையிலான பணிகளும், ஒருவருக்கு ஜீப் ஓட்டுநர் பணியும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தமிழக அரசுக்கு தங்களின் நன்றியை தெரிவித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மா.கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “ 17 பேருக்கு கல்வித் தகுதி அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். முதல்வருக்கும், இதற்கு பரிந்துரை செய்த கனிமொழி எம்.பி.க்கும், அமைச்சர் கீதாஜீவனுக்கும், ஆட்சியருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அஞ்சலி நிகழ்ச்சிகள்
துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை இன்று எளிமையாக அனுசரிக்க முடிவு செய்துள்ளோம். காலை 6.30 மணியளவில் தொடங்கி காலை 10 மணிக்குள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்ற குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், பண்டாரம்பட்டி, சில்வர்புரம், மடத்தூர், பாத்திமா நகர், காந்திநகர், லயன்ஸ் டவுன், பூபாலராயபுரம், மீன்பிடி துறைமுகம் பகுதிகளில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். இது தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமானவர் களுக்கு தண்டனை கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு நகரின் மையப்பகுதியில் நினைவகம் அமைக்க வேண்டும்” என்றார்.
தலா ரூ.1 லட்சம்
ஒருநபர் ஆணையத்தின் இடைக்கால அறிக்கை பரிந்துரைப்படி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக பதியப்பட்ட வழக்குகளை தவிர ஏனைய வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ரூ. 1 லட்சம், கைது செய்யப்பட்டு சிறையில் இறந்த நபரின் தாயாருக்கு ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். கைது செய்யப்பட்ட நபர்களின் உயர்கல்விக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் தடையில்லா சான்று வழங்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பையும் பாதிக்கப்பட்ட மக்கள் வரவேற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT