Published : 21 May 2021 04:53 PM
Last Updated : 21 May 2021 04:53 PM

ஈரோடு அருகே மின்வேலியில் சிக்கி யானை பலி 

ஈரோடு

ஈரோடு அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கிய யானை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த தூக்கநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் யானை, காட்டுப்பன்றி போன்றவை நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்தும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. வனவிலங்குகள் தங்கள் விளைநிலங்களில் நுழையாதவாறு, பல இடங்களில் தோட்ட உரிமையாளர்கள் மின்வேலி அமைத்துள்ளனர்.

இந்நிலையில், குண்டேரிப்பள்ளம் செல்லும் சாலையில் கொங்கர்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்திற்குள் நேற்று இரவு ஒரு யானை நுழைய முயன்றது. அப்போது தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் யானை சிக்கிக் கொண்டது. அதில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால் சம்பவ இடத்திலேயே யானை உயிரிழந்தது. இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

யானையை உடல் கூறாய்வு செய்வதற்காக சத்தியமங்கலம் புலிகள் காப்பக மருத்துவர் அசோகன் வரவழைக்கப்பட்டுள்ளார். வனத்துறையினர் நடத்திய விசாரணையில், மின்வேலியில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சப்பட்டு இருந்ததே யானையின் இறப்பிற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், இப்பகுதியில் யானைகள் வருவதைத் தடுக்க வெட்டப்பட்ட அகழி சேதமடைந்து, மூடிவிட்டதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x