Published : 21 May 2021 04:34 PM
Last Updated : 21 May 2021 04:34 PM
தன்னை நேரில் சந்தித்து மனு கொடுக்க முயன்ற பெண்ணை காவலர்கள் தடுப்பதைக் கண்ட முதல்வர் ஸ்டாலின், காரை நிறுத்தி மனுக்களைப் பெற்றதோடு கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் நம்பிக்கையளித்துச் சென்றார்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள், அதிகாரிகள், மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தை நிறைவு செய்துவிட்டு வெளியேவந்தபோது, முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுக்க சிலர் அப்பகுதிக்கு வந்தனர்.
பாதுகாப்பு கருதி அவர்களைப் போலீஸார் அனுமதிக்கவில்லை. அவர்கள் அனைவருமே நுழைவு வாயில் பகுதியில் நிறுத்தப்பட்டனர்.
இருப்பினும், மாற்றுத்திறனாளியும், சர்வதேச விளையாட்டு வீரருமான பத்ரி நாராயணன், மேலூர் கீழவளவைச் சேர்ந்த லேப்-டெக்னீசியன் திருநாகேசுவரி ஆகியோர் தங்கள் மனுக்களுடன், முதல்வரிடம் கொடுக்க இருந்த மற்றவர்களின் மனுக்களை சேகரித்துக்கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
ஆனாலும், அவர்கள் முதல்வரை சந்திக்க முடியாதபடி பாதி வழியில் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
அந்த நேரம் ஆய்வு முடித்து வெளியே வந்த முதல்வர் ஸ்டாலின் காரில் புறப்பட்டுச் செல்ல முற்பட்டார். அப்போது பிஆர்ஓ அலுவலகம் அருகே பெண் காவலர் ஒருவர் திருநாகேசுவரியை தடுத்து நிறுத்திக்கொண்டார்.
அங்கே நடப்பவற்றை முதல்வர் கவனித்துவிட்டதை அறிந்த, திருநாகேசுவரி முதல்வரைப் பார்த்து மனுக்களுடன் கையை அசைத்து சத்தமிட்டார். இதைப் பார்த்த முதல்வர், காரை நிறுத்தி திருநாகேசுவரியை அழைத்து, அவரிடமிருந்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
அப்போது, அருகில் நின்றிருந்த பத்ரி நாராயணன் உள்ளிட்டடோரும் முதல்வரிடம் கோரிக்கை மனுக்களைக் கொடுத்தனர். அவர்களிடம் ‘ உங்களது கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்‘ என, முதல்வர் உறுதியளித்துச் சென்றார்.
இது குறித்து திருநாகேசுவரி கூறுகையில், ‘‘போலீஸ் தடுத்ததாலும், காரில் சென்ற முதல்வரே என்னைப் பார்த்து, அழைத்து மனுவைப்பெற்றது மகிழ்ச்சி. இது போன்ற எளிமையான முதல்வரைத் தான் எதிர்பார்த்தோம்.
படித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக 20 ஆயிரம் பேர் வேலைக்காகக் காத்திருக்கிறோம். அவுட்சோர்சிங் முறையைத் தவிர்த்து, வேலைவாய்ப்பு அலுவலகம், மருத்துவத் தேர்வு வாரியம் மூலம் லேப்- டெனிக்னீசியன் காலியிடங்களை நிரப்ப முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். அவரும் கனிவோடு பரிசீலிக்கப்படும் எனக் கூறியது சந்தோஷம் அளிக்கிறது,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT