Published : 21 May 2021 12:57 PM
Last Updated : 21 May 2021 12:57 PM
திருச்சியில் 3 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை உருவாக்க மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தியுள்ளதாகத் திருச்சி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி, திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரவுண்டானா அருகேயுள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
''நாட்டை வல்லரசாகவும், வலிமையான தொழில்நுட்பம் மிக்க நாடாக மாற்றவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி. உலகத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்பட்ட அவரது புகழ் இந்திய வரலாற்றில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும். தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு திருச்சிக்கு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் வரவுள்ள நிலையில், அவரது வருகையால் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு விதமான முன்னேற்றங்கள் நிர்வாகத்தில் ஏற்படும் என்று நம்புகிறேன்.
தமிழ்நாடு முதல்வர் என்ற முறையில் பல்வேறு திட்டங்களை - தேர்தல் காலத்தில் அறிவித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றும் வகையில் ஸ்டாலின் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். தமிழ்நாட்டில் கரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகளையும், ஆக்சிஜன் வசதிகளையும் ஏற்படுத்தத் தேவையான நடவடிக்கைகளையும் அவர் எடுத்து வருகிறார்.
மத்திய ரயில்வே துறை சார்பில் சென்னை, பெரம்பூர் உட்பட நாடு முழுவதும் 40 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை நிறுவ வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்குக் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இதேபோல், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை அமைக்கவும், திருச்சி பெல் வளாகத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
திருச்சி பெல் வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர ரூ.5 கோடி முதல் ரூ.6 கோடி வரை செலவாகும் என்று கூறப்படும் நிலையில், ஒருவேளை கரோனா 3-வது அலை வந்தால் அதைச் சமாளிக்க உதவும் என்றும் வலியுறுத்தியுள்ளேன். திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை நிறுவுவது தொடர்பாகத் தமிழ்நாடு முதல்வரிடம் மீண்டும் வலியுறுத்துவேன்.
கரோனாவைத் தொடர்ந்து கருப்புப் பூஞ்சை நோய் பரவி வருகிறது. இந்த பாதிப்புக்கான ஊசியைத் தமிழ்நாட்டுக்கு வழங்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன். இதுதொடர்பாக நான் வைத்த கோரிக்கையை ஏற்று கருப்புப் பூஞ்சை சிகிச்சைக்கு 5,000 ஊசிகளை வரவழைக்கத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழ்நாட்டுக்கு தேவையான தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் உதவிகளை மத்திய அரசும், மத்திய சுகாதார அமைச்சகமும் உடனடியாக வழங்க வேண்டும்''.
இவ்வாறு திருநாவுக்கரசர் எம்.பி. பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT