Published : 21 May 2021 10:47 AM
Last Updated : 21 May 2021 10:47 AM
கடலூரில் வேறு ஒரு நோயாளிக்கு செலுத்துவதற்காக ஆக்சிஜன் குழாயை அகற்றியதால், கணவர் உயிரிழந்துவிட்டதாக, மனைவி புகார் அளித்துள்ளார். இது குறித்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி இன்று (மே 21) வெளியிட்ட அறிக்கை:
"கடலூர் மாவட்டம், திட்டக்குடி பேரூராட்சி, நடுவீதியில் வசித்து வந்த கண்ணன் முதலியார் என்பவருடைய மகன் ராஜா (வயது 49) கரோனா பெருந்தொற்று காரணமாக, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, கடந்த 8 ஆம் தேதி, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், நேற்று காலை வரை அவருக்கு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார்கள் என்றும், நேற்று (20.5.2021) காலை சுமார் 9 மணி அளவில் நோயாளி காலை உணவு அருந்தும் போது அங்கு வந்த பணியில் இருந்த அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அவருடைய வெண்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு வெளியேற முற்பட்டனர் என்றும், அதை தடுக்க முயன்ற அவருடைய மனைவி கஸ்தூரியை தடுத்துவிட்டு, வெண்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்சிஜனை எடுத்துச் சென்று விட்டனர் என்றும், அவரது மனைவி புகார் செய்துள்ளார்.
மேலும், போராடிய அவருடைய மனைவியை கீழே தள்ளிவிட்டனர் என்றும், இதை சற்றும் எதிர்பாராத அவருடைய மனைவி அழுதபடியே தன்னுடைய கணவரை காப்பாற்ற முயன்ற போது நோயாளி துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்து விடுகிறார் என்றும் ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வலம் வருவதை பார்க்கும் போது நெஞ்சு பதைப்பதைக்கிறது.
இவ்வளவு பெரிய ஒரு கொடூரமான சம்பவம் கடலூர் அரசு தலைமை மருத்துவனையில் நேற்று காலையில் நடந்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதனை விரைந்து விசாரித்து தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT