Published : 14 Jun 2014 04:57 PM
Last Updated : 14 Jun 2014 04:57 PM

பொள்ளாச்சி: பாதிரியார்கள் மீது புகார் கூறும் தேவாலய உறுப்பினர்கள்

சிறுமிகள் பாலியல் பலாத்காரம் தொடர்பாக பாதிரியார்கள் மீது பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் தேவாலய உறுப்பினர்கள் புகார் கூறியுள்ளனர்.

பொள்ளாச்சி டிஇஎல்சி தேவலாயத்தின் நிர்வாகிகளுக்கும், பாதிரியாருக்கும் நீண்ட காலமாகவே மோதல் இருந்து வருவதாகவும், குறிப்பாக எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கும், மற்ற பிரிவினருக்கும் இடையே ஜாதிப் பிரச்சினை இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பொள்ளாச்சி நகரின் நடுவே பல ஏக்கர் பரப்பளவுள்ள இந்த இடத்தில் வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டால் வருமானம் வரும் என்று ஒரு பிரிவினரும், அது தனி நபர்கள் ஊழல் செய்யவே துணைபுரியும் என்று இன்னொரு பிரிவினரும் பிரச்சினை கிளப்பி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால்தான் மாணவர் விடுதி உள்ளிட்ட கட்டிடங்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் புதர்மண்டி பாழடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இங்குள்ள பாதிரியார் மீதும் கோவை, திருச்சியில் உள்ள மத்திய பாதிரியார்கள் மீதும் ஏற்கெனவே பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளதாம்.

இப்போது சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமையும் நடந்துவிட்டதால் ஒரு பிரிவினர் தங்களுக்கு ஆதரவாக முதல்வர் ஜெயலலிதா, கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், பொள்ளாச்சி சார்-ஆட்சியர் ஆகியோருக்கு தொடர்ந்து புகார்களை அனுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழ் சுவிசேஷ லுத்திரன் திருச்சபை நலச் சங்கத்தின் செயலாளர் ஒய்.பிரபு என்பவர் பொள்ளாச்சி சார்-ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடேயிடம் வெள்ளிக்கிழமை ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சி டிஇஎல்சி ஆலய வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதியில் நிலவும் பாதுகாப்பற்ற அசாதாரண சூழ்நிலையிலேயே பாலியல் பலாத்காரம் நடந்துள்ளது. இது தொடர்பாக டிஇஎல்சி (பொள்ளாச்சி) நிர்வாகத்தின் பொறுப்பில் உள்ள மூன்று பேரை உடனே கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரபுவிடம் பேசியபோது, இந்த திருச்சபை, சொஸைட்டி ஆக்ட் 1919-ல் பதிவு செய்யப்பட்டது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 17 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த அமைப்பை 1975-ஆம் ஆண்டு அரசு கலைத்துவிட்டு தேவாலயங்களில் உள்ள பாதிரியார்கள் மற்ற மையங்களின் நிர்வாகப் பொறுப்புகளில் தலையிடக்கூடாது, அவர்கள் பாதிரியார் வேலையை மட்டுமே செய்ய வேண்டும் மற்றவற்றை மற்ற நிர்வாகிகளே நடத்த வேண்டும் என விதிமுறைகளை வகுத்துத் தந்தார்கள். ஆனால், அதை இந்த திருச்சபையினர் பின்பற்றவில்லை. பழைய சட்டத்தை வைத்து எல்லாவற்றையும் அவர்களே நடத்தி வருகிறார்கள். இந்த திருச்சபையைப் பொறுத்தவரை கோவை மாவட்டத்தில் மட்டும் 118 பள்ளிகள் செயல்படுகின்றன. வால்பாறை, சந்திராபுரம், பொள்ளாச்சி என 25 மாணவர் விடுதிகளும் உள்ளன. இங்கு முறையான பராமரிப்போ, பாதுகாப்போ இல்லை. ஒரு பள்ளியில் நூறு மாணவர்கள் படித்தால் 300 மாணவர்கள் படிப்பதாகவும், அதற்கேற்ப ஆசிரியர்கள் உள்ளதாகவும் கணக்கு காண்பித்து அரசிடம் சம்பளம் பெறப்படுகிறது. இப் பிரச்சினையில் அரசு இப்போதாவது நடவடிக்கை எடுத்து திருச்சபைகள் மீதான களங்கத்தை துடைத்திட வேண்டும் என்றார்.

இது குறித்து விளக்கம் கேட்க பொள்ளாச்சி டிஇஎல்சி தேவலாய ஆயர் எஸ்.ஏ. பாக்யநாதனை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

பாதுகாப்பற்ற விடுதி

பொள்ளாச்சியில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விடுதி பாதுகாப்பற்றது என்று ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்திற்கு எதிரே டி.இ.எல்.சி. உலக ரட்சகர் தேவாலயம் உள்ளது. இதன் உள்ளே இடதுபுறம் 50 அடி தொலைவில் மாணவர்கள் விடுதி அமைந்துள்ளது.

இதைச் சுற்றிலும் சுமார் ஒரு ஏக்கர் பரப்பிற்கு இடிபாடுகளுடன் கூடிய பழைய கட்டிடங்கள், புதர்கள் அதிகமாக உள்ளன. அதன் கிழக்கு கடைக்கோடியில் பொள்ளாச்சி- கோவை செல்லும் பிரதான சாலைக்குப் போக ஒரு சந்து உள்ளது.

இந்த சந்தை சென்றடைவது அவ்வளவு சுலபமல்ல. வழியெங்கும் இடிபாடுகள், புதர்கள், கழிவுகள் நாற்றம், மது பாட்டில்கள் ஆகியவற்றை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது.

இங்கே சர்வோதய சங்கக் கட்டிடம் ஒன்று செயல்படுகிறது. அந்த கட்டிடத்தின் படிக்கட்டுகள் மாணவர் இல்லத்திற்குச் செல்லும் சந்தின் முன்புறம் இடிபாடுகளுடன் காட்சியளிக்கிறது.

அக்கட்டிடத்தின் படிக்கட்டு மீது ஏறினால் சர்வோதயா சங்கத்தின் பெரிய மொட்டை மாடி. இந்த மாடியின் படிக்கட்டுக்கு கீழேயும், சுற்றிலும் 100 அடி தொலைவுகளில் இடிபாடு கட்டிடங்கள், முட்புதர்கள் நிரம்பியுள்ளன. மது பாட்டில்கள் சிதறிக் கிடக்கின்றன.

சுகாதாரச் சீர்கேடு நிறைந்த மாணவர் விடுதியில் இருந்துதான் இரண்டு சிறுமிகளை சர்வோதயா சங்க மாடிக்கு தூக்கிச் சென்று இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இரவில் கூட நடமாட்டம் மிகுந்த பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் போலீஸார் ரோந்து செல்லும் பகுதி அருகே இருந்தும் இரு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றால் பெண்களுக்கு இங்கே என்ன பாதுகாப்பு? என்று கேள்வி எழுப்புகிறார்கள் சுற்றுப்புற வாசிகள்.

இப் பகுதியில் உள்ள ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களிடம் பேசியபோது, `மாணவர் விடுதி சந்தில் பகலிலேயே இயற்கை உபாதைகளைக் கழிப்பார்கள். மது வாங்கி அதை குடிக்க இங்கேதான் ஒதுங்குவார்கள். பகலிலேயே இந்த இடம் குடிப்பவர்களுக்கு பாதுகாப்பு என்றால் இரவில் ஆட்டம் போடும் குடிமகன்களுக்கு எந்த அளவு பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.

இந்த சந்தில் யார் நுழைகிறார்கள்?, என்ன செய்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. இந்த மாதிரி சம்பவங்கள் ஏற்கனவே பலமுறை நடந்திருக்கலாம். யாரும் வெளியே சொல்லாததால் எதுவும் தெரியவில்லை. இப்போது கூட மூன்று வருடங்களாக இங்கே தங்கிப் படிக்கும் ஒரு மாணவி, நான்கு நாள்களுக்கு முன்பு வந்த ஒரு மாணவி என இரண்டு பேரை பலாத்காரம் செய்ததில் புது மாணவி கூச்சல் போட்டதில்தான் மற்ற மாணவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

மாணவியை தூக்கிப் போவதை பார்த்து வாட்ச்மேனிடமும், இங்குள்ள வார்டனிடமும் மாணவர்கள் சப்தமிட்டு அழைத்துள்ளனர். அதன் பிறகுதான் இந்த விவகாரமே வெளியே வந்திருக்கிறது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x