Published : 21 May 2021 03:12 AM
Last Updated : 21 May 2021 03:12 AM

செங்கை அரசு மருத்துவமனையில் ‘2டிஜி' மருந்து பரிசோதனை: கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நன்கு செயல்படுவதாக தகவல்

செங்கல்பட்டு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் '2டிஜி' மருந்தை பரிசோதனை செய்ததில் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக செயல்படுவது தெரியவந்துள்ளது.

டிஆர்டிஓ மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ் நிறுவனம் இணைந்து '2-டியாக்சி-டி-குளுக்கோஸ்' என்ற கரோனா வைரஸ் தொற்றுக்கான எதிர்ப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளன. சுருக்கமாக '2டிஜி' என்றழைக்கப்படும் இந்த மருந்து, குளுக்கோஸை அடிப்படையாகக் கொண்டது.

நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் 3 கட்டங்களாக இந்த மருந்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் செங்கல்பட்டு அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இணைந்து '2டிஜி' மருந்தை டெல்லியில் அண்மையில் அறிமுகம் செய்து வைத்தனர்.

இது தொடர்பாக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நெஞ்சக நோய் மருத்துவர் வினோத்குமார் ஆதிநாராயணன் கூறியதாவது:

2டிஜி மருந்து அலோபதி மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இரு கட்டமாக 18 முதல் 65 வயதுக்குள் என 20-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கி அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தண்ணீரில் கலந்து குடிக்கலாம்

இணை நோய் இல்லாத நோயாளிகளிடம் இந்த பரிசோதனை செய்யப்பட்டது. தண்ணீரில் கலந்து குடிக்கக் கூடிய இந்த மருந்து நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டதில் நல்ல பலன் கிடைத்தது.

2டிஜி மருந்து கரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. மிதமான, தீவிரமான பாதிப்புள்ள கரோனா நோயாளிகளுக்கு 2டிஜிமருந்தை வழங்கலாம். நோயாளியின் எடையைப் பொறுத்து 2டிஜி மருந்து வழங்கப்படுகிறது. இந்த மருந்தை தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். 4 முதல் 5 நாட்களில் தொற்றில் இருந்து குணமடைவார்கள்.

தற்போதுள்ள மருந்துகளைவிட, இந்த மருந்தை எடுத்துக் கொள்வதால் ஆக்சிஜன் தேவை வெகுவாக குறையும். நீரிழிவு நோயாளிகளுக்கும், மற்ற பாதிப்புகள் உள்ள நோயாளிகளுக்கும் மருத்துவர்கள் ஆலோசனை பெற்று மருந்தை பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x