Published : 20 May 2021 06:59 PM
Last Updated : 20 May 2021 06:59 PM
கரோனா நோய்த்தடுப்பு பாதுகாப்புப் பணியில் பணியாற்றியபோது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த காவலர் குடும்பங்களில் முதற்கட்டமாக 36 குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் உதவித்தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்களாகப் பாடுபடுபவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், போலீஸார் ஆகியோர் அடங்குவர். பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாரில் கரோனா தொற்று ஏற்பட்டு பலியாவோர் எண்ணிக்கை அதிகம். உதவி ஆணையர் தொடங்கி கடைக்கோடி காவலர் வரை உயிரிழப்புகள் அதிகம்.
கரோனா நோயிலிருந்து மக்களைக் காக்க அந்நோய் மக்களிடம் பரவாமல் தடுக்க, முழு ஊரடங்கு, பாதிப்படைந்த பகுதிகளைத் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைத் தங்களின் குடும்பம், உயிர் உள்ளிட்டவற்றைப் பெரிதாகப் பாராமல் இரவு பகலாக பணியாற்றி வந்த காவலர்கள் உயிரிழந்ததால் அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
முன்களப் பணியாளர்களில் நூற்றுக்கணக்கான காவலர்கள் உயிரிழந்தும் அவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி கிடைக்கவில்லை என்பது காவலர்களின் ஆதங்கமாக இருந்தது. கரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்த மருத்துவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, கரோனா காலப் பாதுகாப்புப் பணியில் உயிர்த் தியாகம் செய்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை காவல் துறையில் எழுப்பப்பட்டது.
பத்திரிகையாளர்கள், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரும் அரசை வலியுறுத்தினர். இதற்குத் தீர்வளிக்கும் விதத்தில் காவலர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசின் இன்றைய செய்திக்குறிப்பு:
“தமிழகத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவுதலைத் தடுக்கும் விதத்தில் அரசுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் தீவிரமாகப் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் பணியின் மூலமாக நோய்த்தொற்று ஏற்பட்டு தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். முக்கியமாக தமிழக காவல் துறையில் இதுவரை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட 84 நபர்கள் தங்களுடைய இன்னுயிரை இழந்துவிட்டார்கள்.
இதுவரை தங்கள் இன்னுயிரினை இழந்தவர்களின் 13 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.3.25 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 71 நபர்களில் 36 நபர்களுக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டு அவர்களுக்குத் தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.9 கோடியை நிவாரணத் தொகையாக வழங்க முதல்வரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள 35 நபர்களுக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டவுடன் பரிசீலித்து அவர்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT