Published : 25 Mar 2014 10:42 AM
Last Updated : 25 Mar 2014 10:42 AM

தேர்தல் ஆணைய புதிய விதிகளுக்கு மதிமுக, பாமக எதிர்ப்பு

இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட கட்சிகளை அலட்சியப்படுத்துவதற்கும் பிரச்சார அனுமதியை தொகுதியின் தலைமையிடத்தில் மட்டும் வழங்குவது என்று விதிகளை மாற்றியிருப்பதற்கும் மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் நிர்வாகம் சார்பில், அத்தொகுதிக்கு உட் பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது.

இதில் தேர்தலில் பிரச் சாரக் கூட்டம், பேரணி நடத்துவது, அதில் பயன் படுத்தப்படும் வாகனங் ளுக்கான அனுமதியைப் பெறுவது குறித்து விளக்கப்பட்டது.

அப்போது, பிரச்சாரங்களுக்கு அனுமதி வழங்குவதில் ஒற்றைச் சாளர முறையை கடைபிடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் புதிய விதியை அறிவித்துள்ளது. இனி, அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதி அளவில் நியமிக்கப்பட்டுள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பிரச்சார அனுமதிகளை வழங்க முடியாது.

அனுமதி வழங்கு வதற்காக, மக்களவைத் தொகுதி தலைமை இடத்தில் தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான அனுமதி வழங்கும் மையமும் திறக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் தெரிவித்திருந்தார்.

இது குறித்து மதிமுக துணைப் பொதுச் செயலரும், காஞ்சி புரம் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான மல்லை சத்தியாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

‘‘தேர்தல் ஆணையம் சூழ்நிலைக்கேற்ப புதுப் புது விதிகளை உருவாக்கி வருகிறது. இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை மட்டும் அழைத்து தேர்தல் ஆணையம் விளக்குகிறது. எங்களைப் போன்ற பதிவு செய்யப்பட்ட கட்சிகளை அழைத்து விளக்குவதில்லை.

பதிவு செய்யப்பட்ட அனைத்து கட்சிகளையும் அழைப் பதில் சிக்கல் இருந்தால், வேட்பாளர்களை அறிவித் திருக்கும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளையாவது அழைத்து விதிமுறைகளை விளக்கலாம். எங்கள் கட்சியினர் எவ்வாறு புதிய விதிகளை தெரிந்துக்கொண்டு கடைபிடிப்பது என்றும், பிரச்சார கூட்டங்களை நடத்துவது என்றும், வேட்பு மனுவை தாக்கல் செய்வது என்றும் புரியவில்லை.

மேலும் தொகுதி முழுவதுமிருந்து தொகுதி தலைமையிடத்துக்கு வந்துதான் அனுமதி பெற வேண்டும் என்றால், சுமார் 130 கி.மீ தொலையிலிருந்து ஒருவர் அனுமதிக்காக காஞ்சிபுரம் வந்து செல்ல வேண்டும். இதற்கு முழுதுமாக ஒருநாள் தேவைப்படும்.

இதனால் பல வேலைகள் பாதிக்கப்படும். தேர்தல் ஆணையத்தின் இது போன்ற விதிகளை மதிமுக சார்பில் கண்டிக்கிறோம்’’ என்றார் அவர்.

இதுபோலவே காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாமக செயலர் சங்கர் பேசும்போது, ‘‘பதிவு செய்யப்பட்ட கட்சிகளை தேர்தல் ஆணையம் அழைத்து, தேர்தல் ஆணைய புதிய விதி களை விளக்காததற்கு எங்கள் கட்சி சார்பில் கண்டனம் தெரிவித் துக்கொள்கிறோம்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சி களுக்கு தொகுதி முழுவதுக் குமான வாக்காளர் பட்டியலை இலவசமாக வழங்குகிறது. இது போன்ற தேர்தல் விதி களை எங்கள் கட்சியினர் தெரிந்து கொள்ளும் வகையில் எங்களுக் கும் தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதாகக் கூறிக்கொண்டு, வியாபாரிகளுக்கு தொந்தரவு தருகிறது. அதனால் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு இல்லாத விதிகளை வகுக்க வேண்டும்’’ என்றார் .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x