Published : 20 May 2021 06:22 PM
Last Updated : 20 May 2021 06:22 PM
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் கரோனா குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 770 கிராமங்களுக்குக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் பாதிப்பு 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 3,748 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புறங்களைத் தொடர்ந்து தற்போது கிராமப் பகுதிகளிலும் கரோனா நோய்ப் பரவல் அதிகமாகக் காணப்படுகிறது. திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி மற்றும் ஆம்பூரை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வியாபாரம், தொழில் நிமித்தமாக நகர்ப்புறங்களுக்கு வந்து செல்வதால் நோய்த் தொற்றுக்கு ஆளாகி வருவதாகச் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே, கிராமப் பகுதிகளில் கரோனா குறித்த விழிப்புணர்வும், கிராம மக்களுக்குத் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து மாவட்டக் காவல் துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் ‘கிராம விழிக்கண் குழு’ அமைக்கப்பட்டு அதன் மூலம் கிராம மக்களுக்கு கரோனா நோய்த் தொற்று மற்றும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் கூறியதாவது:
‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 820 காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், கொத்தூர், தகரகுப்பம், பாரதி நகர், கொல்லப்பள்ளி ஆகிய 4 இடங்களில் மாநில சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, சின்னகந்திலி, தோரணம்பதி, பேராம்பட்டு, சுந்தரம்பள்ளி, வெலக்கல்நத்தம், மாதனூர், தீர்த்தம், உமராபாத், ஓணாங்குட்டை, காவலூர் ஆகிய இடங்களில் மாவட்ட எல்லைக்கான சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு அங்கு 3 ஷிப்ட் அடிப்படையில் சுமார் 96 காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகள், 25 தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களில் 174 காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் முழு ஊரடங்கின்போது அரசு உத்தரவை மீறி, தேவையின்றி வெளியே சுற்றி வரும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் அதிக அளவிலான ஆட்களைத் திரட்டி வியாபாரம் செய்த 96 கடைகளுக்குக் காவல்துறை மூலம் சீல் வைக்கப்பட்டு கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் கரோனா பரவல் அதிகமாகக் காணப்படுவதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாய் கிராமங்கள், குக்கிராமங்கள் என மொத்தம் 770 கிராமங்களுக்கு கரோனா நோய்த் தொற்று மற்றும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தக் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதற்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ‘கிராம விழிக்கண் குழு மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் கிராம காவலர்களுடன் தொடர்பு கொண்டு அந்த கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது’’.
இவ்வாறு டாக்டர் விஜயகுமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT