Last Updated : 20 May, 2021 04:03 PM

 

Published : 20 May 2021 04:03 PM
Last Updated : 20 May 2021 04:03 PM

கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்: முதல்வருக்கு டாக்பியா வேண்டுகோள்

மதுரை

கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் (டாக்பியா) வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த சங்கத்தின் மாநில கவுரவ பொதுச் செயலர் செ.குப்புசாமி, மாநில பொதுச் செயலர் பி.காமராஜ்பாண்டியன், மதுரை மாவட்ட செயலர் ஆ.ம.ஆசிரிய தேவன் ஆகியோர் கூறியதாவது:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து திட்டமான அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி அரசுக்கு நற்பெயர் ஈட்டித்தரும் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் மற்றும்நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டு அட்டையில் இருப்பது போல், கூட்டுறவு பணியாளர்களின் காப்பீட்டு அட்டையிலும் கரோனா உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை பெற வசதி செய்ய வேண்டும்.

பெருந்தொற்று காலத்தில் போக்குவரத்து வசதியில்லாத நிலையில் ரேசன் கடை பணியாளர்கள், சங்க பணியாளர்கள் நெடுந்தூரம் பயணம் செய்து பணிக்கு வருகின்றனர். இதனால் ரேசன் கடை பணியாளர்கள் அனைவருக்கும் பயண செலவுக்காக தினமும் ரூ.500 வழங்க வேண்டும்.
அரசின் பல்வேறு கடன் தள்ளுபடி திட்டங்களால் தமிழகத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் சுமார் 6 மாதங்களாக வருவாய் இல்லாமல், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில் நலிவடைந்துள்ளன.

இதனால் தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்க வட்டி இல்லாத நிதியுதவி வழங்கவும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் கருணை ஓய்வூதியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x