Published : 20 May 2021 02:36 PM
Last Updated : 20 May 2021 02:36 PM
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசுக்கு, ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்க, கையிருப்பு உற்பத்தித் திறன் - மத்திய அரசு தொகுப்பு ஒதுக்கீடு இரண்டையும் தாண்டி, தொழில்துறை ஆக்சிஜனை மருத்துவ ஆக்சிஜனாக மாற்றுவதும் முக்கியமான முன்னெடுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெதர்லாந்து, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகள், ஒடிசா போன்ற வெளிமாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்து ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்கான தமிழக தொழில்துறையின் நடவடிக்கைகள் பெரும் கவனத்தையும், நம்பிக்கை உணர்வையும் ஈர்த்துள்ளன.
பள்ளிக் கல்வித்துறையோடு சேர்த்து நன்கறியப்பட்ட தங்கம் தென்னரசுவிடம், தொழில்துறை ஒப்படைக்கப்பட்ட போது என்ன செய்யப்போகிறார் என, நெற்றி குறுகிப்பார்த்த கண்கள், அகல விரிந்துகொண்டிருக்கின்றன. தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விரிவாக நம்மிடம் பேசியுள்ளார்,
மே முதல் வார இறுதிவரைகூட, தொழில்துறை மூலம் ஆக்சிஜன் பற்றாக்குறையை ஈடுகட்டுவது என்பது பேச்சளவில்தான் அதிகம் இருந்தது. ஆனால், அடுத்த ஒருவாரத்தில் பெரும் மாற்றம் நடந்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன், தொழில் துறை மூலம் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க முடியும் என்ற எண்ணத்துக்கு எப்படி வந்தீர்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை உயர்ந்துகொண்டே இருக்கிறது. அதனை தொழிற்சாலைகள் மூலம்தான் உற்பத்தி செய்ய முடியும். தொழில்துறை ஆக்சிஜனை மருத்துவ ஆக்சிஜனாக மாற்ற வேண்டும். மத்திய தொகுப்பிலிருந்து நாளொன்றுக்கு 220 மெட்ரிக் டன் நமக்கு வந்துகொண்டிருந்த நிலையில், மத்திய அரசு இப்போது நாம் வலியுறுத்திய பிறகு 419 மெட்ரிக் டன் ஆக்சிஜனாக உயர்த்தியிருக்கிறது. அதுவும் போதவில்லை.
நம்முடைய ஒருநாள் பயன்பாடு 470 மெட்ரிக் டன் அளவுக்கு மேலேதான் உள்ளது. கரோனா இரண்டாம் அலையில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலானவர்களுக்கு ஆக்சிஜன் தேவை ஏற்படுகிறது. எனவே, ஆக்சிஜன் தேவை உயர்ந்துகொண்டே செல்லும்போது, நாம் மத்திய தொகுப்பை மட்டும் நம்பிக்கொண்டிருக்க முடியாது.
எனவே, நம்மிடம் இருக்கக்கூடிய தொழிற்சாலை வசதிகளைக் கொண்டு உற்பத்தியைத் தொடங்கும் நடவடிக்கையைத்தான் எடுத்துள்ளோம். ஸ்டெர்லைட் போன்ற ஆலையிலிருந்து இப்போது நாளொன்றுக்கு 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும். ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் ஆலையிலிருந்து (JSW) கிடைக்கக்கூடிய ஆக்சிஜன் அளவை 10 மெட்ரிக் டன்னிலிருந்து 16 மெட்ரிக் டன்னாக உயர்த்தியிருக்கிறோம்.
ஏற்கெனவே ஐநாக்ஸ் நிறுவனத்திலிருந்தும் ஆக்சிஜன் வருகிறது. அதேபோன்று, ஏற்கெனவே ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு, தற்போது நிறுத்தப்பட்டுள்ள ஆலைகளை மீண்டும் இயக்க முடியுமா எனவும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.
குறிப்பாக, பெல் ஆக்சிஜன் ஆலையை இயக்குவதற்காகப் பேச்சுவார்த்தை நடக்கிறது. அதனை இயக்குவதில் சிரமங்கள் உள்ளன. தொழில்நுட்ப ரீதியாக எந்த அளவுக்கு சாத்தியம் எனத் தெரியவில்லை. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதன் முடிவைப் பொறுத்து அமையும்.
இப்போது, தொழில்துறை மூலம் ஒரு நாளுக்கு எவ்வளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது?
தமிழ்நாட்டில் தொழில்துறை மூலம் நாளொன்றுக்கு 200 மெட்ரிக் டன் வரை ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதி வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இன்னும் சில வாரங்களில் தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை 840 மெட்ரிக் டன்னாக உயரும் என, முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். இதனைச் சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
இரண்டாம் அலையை எதிர்கொள்ள ஏற்கெனவே வந்துகொண்டிருக்கும் ஆக்சிஜன், தடைப்படாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எல்லா விதமான வாய்ப்புகளையும் பயன்படுத்திவருகிறோம். இவ்வளவுக்கு மீறியும் ஆக்சிஜன் தேவைக்கும், கிடைப்பதற்குமான இடைவெளியை வெளியிலிருந்து இறக்குமதி செய்து பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அப்படித்தான் நெதர்லாந்திலிருந்து 70 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை முதல் கட்டமாகக் கொண்டு வந்தோம். மேலும், ஒடிசாவின் ரூர்கேலாவிலிருந்து முதல் கட்டமாக 80 மெட்ரிக் டன் கொண்டு வந்தோம். தொடர்பு சங்கிலி விடுபடாமல் கொண்டு வருவதற்கு கிரயோஜெனிக் கண்டெய்னர்கள் முக்கியமாக தேவைப்படுகின்றன. எனவே, சீனாவிலிருந்து 12 கிரயோஜெனிக் கண்டெய்னர்களை வாங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். சிலிண்டர்கள் அதிகம் தேவைப்படுவதால், சிங்கப்பூரிலிருந்து சிலிண்டர்கள் வாங்கியுள்ளோம்.
கரோனா காலத்தில் மருத்துவ வளப் பயன்பாடு பெரும் சவாலாகியுள்ளது. பெருந்தொற்றுக்கு நடுவே, வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்வதில் என்னென்ன சிரமங்கள் உள்ளன. அதனை எப்படி ஒருங்கிணைக்கிறீர்கள்?
போக்குவரத்துதான் இதில் முக்கியமான பிரச்சினை. இதில் நமக்கு பெரிய பலம் ஐஏஎஃப் (IAF). சிறப்பான பங்களிப்பைச் செய்துவருகின்றனர். ரயில்வே துறையும் உதவி செய்கிறது. ஆக்சிஜனைக் கொண்டு வரும்போது, எளிதில் தீப்பிடிக்கும் என்பதால், கவனமாகக் கையாள வேண்டிய அவசியமும் உள்ளது.
தமிழகத்தின் வெவ்வேறு மண்டலங்கள், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. பகுதி வாரியாக, ஆக்சிஜன் தேவைக்கேற்ப எப்படி விநியோகிக்கப்படுகிறது?
அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப பிரித்து வழங்கப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகள் அங்குள்ள ஏஜென்சிகளிடம் தொடர்பில் உள்ளன. அவர்கள் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. தொழில்துறை செயலாளர் தலைமையில் இதனை ஒருங்கிணைக்க கமிட்டி உள்ளது. டிஎன்எம்எஸ்சி-யும் (TNMSC) ஒருங்கிணைந்து தேவைக்கேற்ப விநியோகம் செய்யப்படுகிறது.
ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள், கரோனா தொடர்பான மருந்துகள் ஆகியவற்றின் உற்பத்தியில் தன்னிறைவை அடைய தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் - டிட்கோ (TIDCO) முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது எப்படி நடைமுறைப்படுத்தப்படும்?
இங்கேயே ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் ஆலைகள், தடுப்பூசிகளை உருவாக்க தொழிற்சாலைகள் அமைக்க, முதலீடு செய்வதற்கு டிட்கோ மூலம் அழைப்பு விடுத்திருக்கிறோம். ரூ.50 கோடி முதலீடு செய்தால், முதலீட்டு மானியம் வழங்கப்படும். இந்தியாவில் இதுவரை முதலீட்டு மானியம் உடனடியாக கொடுத்ததில்லை. அதனைச் செய்கிறோம்.
இந்த முதலீடுகள் மூலம் இரண்டாம் அலையின்போதே நாம் பயனை அனுபவிக்க முடியுமா? இதன் நோக்கம் என்ன?
உடனடியாக ஆலைகள் வருவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், இப்போதுதான் டெண்டர் கோரியுள்ளோம். இனிதான் ஆலை அமைக்க வேண்டும். இரண்டாம் அலைக்கு இது உதவும் எனச் சொல்ல முடியாது. எதிர்கால தேவைக்குத்தான் பயன்படும்.
கரோனா தடுப்பூசியைப் பொறுத்தவரை காப்புரிமை உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன. அப்படி இருக்கும்போதே எப்படி தமிழகம் அதனைத் தயாரிக்க முடியும்?
இது எல்லாமே எதிர்காலத் தேவைக்காக, தமிழகம் எல்லாவற்றிலும் தன்னிறைவை அடைவதற்கான முயற்சி. உற்பத்திக்கான வழிகளை முதலில் செய்தால், பின் நாம் மத்திய அரசுடன் மற்றவை குறித்துப் பேச முடியும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசின் மோதல் அதிகரிக்கும், மத்திய அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டுக்குக் கிடைக்காது என்றெல்லாம் விவாதங்கள் நடந்தன. எப்படி இருக்கிறது மத்திய அரசின் ஒத்துழைப்பு?
கொள்கை ரீதியில் எதை எதிர்க்க வேண்டும், கொள்ளை நோய் விவகாரத்தில் எதை எப்படிப் பெற வேண்டும் என்ற நுட்பமும், ஆட்சி அனுபவமும் கொண்டவர்கள் நாங்கள். ஆகவே, தமிழ்நாட்டுக்குத் தேவையானவற்றை உரிமையோடு, தயக்கமில்லாமல் கேட்டுப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஒன்றிய அரசு என்கிற அளவில் ஒத்துழைப்பு நன்றாக இருக்கிறது. நம் கோரிக்கைகளுக்கு ஒத்துழைக்கின்றனர். தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பிரதமரும் பாராட்டியுள்ளார்.
ஆக்சிஜன் ஒதுக்கீட்டு அளவு உயர்த்துவதைக் குறித்து நம் முதல்வர் கேட்டவிதம், முதல்வர் கேட்டதும் ஆக்சிஜன் ஒதுக்கீட்டை உயர்த்திய செயல் என்பதுதான், ஓர் மாநில அரசாக தங்கள் தேவைகளை மத்திய அரசிடம் நிறைவேற்றிக் கொள்ளப் போகிறது என்பதற்குச் சான்று
இந்தக் கடினமான காலத்தில் முதல்வர் எப்படி இருக்கிறார், என்ன நினைக்கிறார்?
பதவிக்கு வருவதற்கு முன்பே ஆலோசனைகள், ஆய்வுகள் நடத்திய முதல்வர் அவராகத்தான் இருப்பார். பெருந்தொற்றிலிருந்து மக்களை விடுவிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முதல்வர் மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு 12 மணிக்கு என்னை அழைத்து என்னென்ன நடக்கிறது, இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்டறிவார். 'இது கடினமான காலம்தான் - ஆனால் கடக்க முடியாத காலம் இல்லை' என்பதில் தெளிவாக இருக்கிறார். அந்த எண்ணத்தின் அடிப்படையில் தான் அரசையும், மக்களையும் இணைக்கிறார்.
தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வரும் நாட்களில் பெரும் சவால் என எதை நினைக்கிறீர்கள்?
தொற்றை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர். அதனால், சாதாரணமாக அறிகுறிகள் தோன்றும்போது அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், வீட்டிலேயே மருந்துகள் எடுத்துக்கொள்கின்றனர்.
நோய் முற்றிய பிறகு மருத்துவமனைக்கு வருகின்றனர். இதனால், ஆக்சிஜன் தேவை உயர்கிறது. ஓர் அறிவியல்பூர்வமான போராட்டத்தில், மக்களை முழுமையாக அதில் உள் இழுப்பதும் அதன் ஒருபகுதிதான்.
கரோனாவுக்கு எதிரான வெற்றி என்பது, மக்களின் விழிப்புணர்விலேயே உள்ளது. அதை ஏற்படுத்தும் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT