Published : 20 May 2021 12:54 PM
Last Updated : 20 May 2021 12:54 PM
காணாமல் போன தமிழக மீனவர்கள் 9 பேரை உடனடியாக மீட்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஏப். 29 அன்று, கொச்சி துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேர், இன்னும் கரை திரும்பாதது பெரும் கலக்கத்தையும், சோகத்தையும் அவரது குடும்பத்தினரிடையேயும், மீனவர்களிடையேயும் ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஏப்ரல் 29ஆம் தேதியன்று கடலுக்குச் சென்ற அவர்களது படகு, டவ்-தே புயல் எச்சரிக்கையை அடுத்துக் கரை திரும்பும்போது சிக்கி மூழ்கியதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், நாகை மீனவர்கள் 9 பேரின் நிலை என்னவென்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மீனவர்கள் 9 பேரை உடனடியாக மீட்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
ஏப்.29-ம் தேதி அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகையைச் சேர்ந்த 9 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை எனத் தனது கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அந்த மீனவர்களின் படகு டவ்-தே புயலில் சிக்கியிருக்கலாம் என, அவர்களது குடும்பத்தினர் அஞ்சுவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். 9 மீனவர்களையும் மீட்க பிரதமர் உடனடியாக இந்தியக் கடற்படை மற்றும் விமானப் படைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஈபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT