Published : 20 May 2021 01:00 PM
Last Updated : 20 May 2021 01:00 PM
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் மைல் கல்லாக 18 முதல் 44 வயதுக்குள்ளோருக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் திருப்பூரில் இன்று தொடங்கி வைத்தார். முதலில் பதிவு செய்த 20 பேர் இந்நிகழ்ச்சியில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
கரோனா தொற்றின் முதல் அலையின்போதே தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என உலக நாடுகள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் கவனம் செலுத்தின. இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகள் செய்லபாட்டுக்கு வந்தன. ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் திட்டம் அமலானது.
பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தும் முறை அமலானது. பின்னர் மார்ச் மாதத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பரவல் வேகம் அதிகரித்ததை அடுத்து 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டாததால் தமிழகம் இந்தியாவிலேயே பின்தங்கிய மாநிலமாக விளங்கியது. இதனிடையே 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. இது மே மாதம் முதல் தேதி தொடங்குவதாக இருந்தது. ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் இதற்காகப் பதிவு செய்யும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்தது.
மே 7ஆம் தேதி முதல்வராகப் பதவி ஏற்ற ஸ்டாலின், தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துவதாக அறிவித்தார். 5 கோடி தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதாக அரசு அறிவித்தது. இதில் 3.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப் புள்ளி கோரியது.
இதுவரை அரசின் இணையதளத்தில் 3 கோடியே 63 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்துள்ளனர். மே 20ஆம் தேதி முதல் 18 வயது முதல் 44 வயதுள்ளோருக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அறிவித்தது. அதன்படி முதல்வர் ஸ்டாலின் இன்று காலை திருப்பூரில், நேதாஜி ஆயத்த ஆடை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், முத்துசாமி, வெள்ளகோவில் சாமிநாதன், செந்தில்பாலாஜி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முதல்வர் தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கி வைத்தவுடன் முன்பதிவு செய்திருந்த 20 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பமானது.
தமிழகத்தில் இதுவரை சுமார் 73 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் சுமார் 52 லட்சம் பேர் முதல் தவணையும், சுமார் 19 லட்சம் பேர் இரண்டு தவணைகளும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT