Published : 20 May 2021 03:12 AM
Last Updated : 20 May 2021 03:12 AM

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி; முதல்வர் ஸ்டாலின் இன்று தொடக்கம்: 5 மாவட்டங்களில் 2 நாட்கள் கரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார்

சேலம் இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிறப்பு சிகிச்சை மைய பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். உடன் ஆட்சியர் கார்மேகம், எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர். படம்: எஸ்.குரு பிரசாத்

திருப்பூர்/சேலம்/சென்னை

திருப்பூரில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை இன்று தொடங்கி வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்றும் நாளையும் சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் கரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார்.

மே 1-ம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், தமிழகத்தில் அதற்கான தடுப்பூசி வந்து சேராத நிலையில், இந்த திட்டம் தமிழகத்தில் தொடங்கவில்லை.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள நேதாஜி அப்பேரல் பார்க்கில் இன்று நடைபெறும் நிகழ்வில் தமிழகத்தில் முதல்முறையாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, தொழில் துறையினருடன் ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

அதற்கு முன்பாக கரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய இன்று (20-ம் தேதி) சேலத்துக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலம் இரும்பாலையில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணிகளை பார்வையிடுகிறார்.

இப்பணிகளை மேற்பார்வையிட்ட மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சேலம்இரும்பாலை வளாகத்தில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கரோனாசிகிச்சை மையம் அமைக்கப்படும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்கிறார். இதுதொடர்பாக சுகாதாரத் துறையினர் மற்றும் இரும்பாலை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த தற்காலிக சிகிச்சை மையத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வருவதற்கான ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, 500 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்படுகிறது. கூடுதல் படுக்கைகள் அமைக்க தேவையான கட்டமைப்புகளையும் ஏற்படுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ்.கார்மேகம், எம்பி பார்த்திபன், எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

கோவையைத் தொடர்ந்து நாளை காலை மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர், தோப்பூர் சென்று மருத்துவமனையை பார்வையிடுகிறார்.

அங்கிருந்து திருச்சி சென்று, அரசு மருத்துவமனையில் ஆய்வுசெய்கிறார். தொடர்ந்து தேசிய தொழில்நுட்ப நிறுவனம் செல்லும்அவர், ஆய்வு செய்வதுடன் ஆலோசனையும் மேற்கொள்கிறார். அதன்பின்பு மாலை செய்தியாளர்களை சந்திக்கும் முதல்வர், திருச்சியில் இருந்து இரவு புறப்பட்டு சென்னை வந்தடைகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x