Published : 29 Dec 2015 03:38 PM
Last Updated : 29 Dec 2015 03:38 PM
வனம் என்பது பல்லாயிரக்கணக்கான வன உயிரினங்களுக்கான வாழ்விடம். காடுகளில் பல்லுயிர் பரவலாக்கலில் மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் தேனீக்களை அடுத்து, வண்ணத்துப்பூச்சியின் பங்கு மிகவும் முக்கியமானது.
அழிந்துவரும் வண்ணத்துப்பூச்சிகளைப் பாதுகாக்கவும், அவற்றின் வாழ்வியலை மக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும், சூழலியல் சுற்றுலாத்தலமாக ஸ்ரீரங்கம் அருகே மேலூரில் காவிரிக் கரையில் சுமார் ரூ.8.30 கோடியில் 25 ஏக்கரில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்கத்துக்காக பல்வேறு வகை மரங்களும், அவற்றின் உணவுக்காக பல்வேறு வகை பூச்செடிகளும் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், வண்ணத்துப்பூச்சிகளை இனப்பெருக்கம் செய்வதற்காக பிரத்யேக இனப்பெருக்கக் கூடங்களும் இங்குள்ளன.
சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்றுகள், புல்வெளிகள், குட்டைகள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், பூங்கா தொடங்கியதன் நோக்கம் பல்வேறு குறைபாடுகள் காரணமாக முழுமை அடையவில்லை என்று வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏ.சி. இயந்திரம் இல்லை…
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “கிராமங்களில் குறிப்பாக, நீர்நிலைகளையொட்டிய பகுதிகளில் காணப்படும் வண்ணத்துப்பூச்சிகளைத் தவிர பிரத்யேக இனம் என்று குறிப்பிட இந்தப் பூங்காவில் எதுவும் இல்லை. வண்ணத்துப்பூச்சியின் வாழ்வியலை மக்களுக்கு எளிதாக விளக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள பாதுகாப்பகத்துக்கு இதுவரை பொதுப்பணித் துறையினர் ஏ.சி. இயந்திரங்களைப் பொருத்தவில்லை.
குறுகலான சாலை…
குறிப்பாக, மக்களுக்காகத் தொடங்கப்பட்ட இந்தப் பூங்காவுக்கு செல்லும் சாலைகள் மிகவும் குறுகலாகவும், மோசமான நிலையிலும் உள்ளன. சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மட்டும் மினி பஸ் இயக்கப்படுகிறது. போதிய சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாததால் அசம்பாவிதம் நேரிட்டாலோ அல்லது அவசர காலத்திலோ விரைவாக நகருக்குள் வர முடியாத நிலை உள்ளது.
வேனுக்கு அனுமதி கிடைக்கவில்லை
பூங்காவுக்காக அரசு அளித்த வேனுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து இன்னும் சாலை அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அந்த வேன் வந்த நாள் முதல் பூங்காவிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
புறக்காவல் நிலையம் தேவை
இதுவரை சுமார் 30,000-க்கும் அதிகமானோர் வந்து சென்றுள்ள நிலையில், பாதுகாப்புக்காக போலீஸார் நியமிக்கப்படவில்லை. எனவே, இங்கு உடனடியாக புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
கருங்கற்களைக் கொண்டு பூங்காவுக்கு கனத்த சுற்றுச்சுவர் அமைத்துள்ள நிலையில், அதில் குறிப்பிட்ட இடைவெளியில் கம்பிகளைப் பொருத்தியுள்ளது பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
அதேபோல, பூங்காவில் கேன்டீன் அமைக்கும் பணிகளை விரைவாக முடித்து, குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே பொதுமக்கள் உணவருந்த வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். வெளியில் இருந்து உணவுப் பொருட்களை பூங்காவுக்குள் கொண்டு வருவதைத் தடுக்க வேண்டும். பூங்காவில் மக்கள் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இல்லையெனில், பூங்காவில் சுற்றுச்சூழல், சுகாதாரம் மோசமாகிவிடும்.
தொகுதி மாறியதால் தொய்வு..
ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவாக முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை பூங்கா பணிகளில் அக்கறை காட்டிய அதிகாரிகள், அவர் தொகுதி மாறியதால் பணிகளை நிறைவேற்ற அக்கறை காட்டவில்லை.
பூங்காவுக்கு பொதுமக்கள் எளிதாக சென்று வரும் வகையில் சாலை மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதுடன், பூங்காவில் நிறைவடையாமல் உள்ள பணிகளை உடனடியாக நிறைவேற்றினால் மட்டுமே பூங்கா தொடங்கியதன் நோக்கம் முழுமை அடையும். இல்லையெனில், மக்கள் வருகை குறைந்து பிளாஸ்டிக் மற்றும் தகரத்தால் ஆன வண்ணத்துப்பூச்சிகள்தான் பூங்காவில் மிஞ்சும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT