Published : 19 May 2021 05:53 PM
Last Updated : 19 May 2021 05:53 PM

கரோனாவால் உயிரிழந்தோர் உடலை அடக்கம் செய்யும் தன்னார்வலர்கள்; முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்: எஸ்டிபிஐ கோரிக்கை

கரோனா தொற்றால் உயிரிழப்போர் உடலைத் தொண்டுள்ளத்துடன் தைரியமாக முன்வந்து அடக்கம் செய்யும் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை பரவலின் வேகம் மிக அதிகமாக உள்ளது. அத்துடன் உயிரிழப்பு மிக அதிக அளவில் உள்ளது. தினசரி சென்னையில் மட்டும் 80 பேர் வரை உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. தொற்றால் இறந்து சொந்த உறவினர்களே புறக்கணிக்கும் உடல்களைத் தன்னார்வத் தொண்டுள்ளோம் படைத்தோர் அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் பணி முதல் அலையின்போது பாராட்டப்பட்டது. தற்போது தீவிரமாக உள்ள இரண்டாவது அலையிலும் முனைப்பாக உள்ளது. இந்த நிலையில் அடக்கம் செய்யும் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கை:

“கரோனா பரவலுக்கு எதிரான தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணத் திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. மேலும், பத்திரிகையாளர்கள், மயானப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

அதேபோல் கரோனா பரவலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள், தொற்றினால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் அரசு நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வலர்களாகப் பணிபுரிபவர்கள் மற்றும் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்குபவர்களையும் முன்களப் பணியாளர்களாகத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

கரோனா தொற்றைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இத்தகைய தன்னார்வலர்களின் பணி என்பது மிக முக்கியமானது. கரோனாவின் முதல் அலை தொடங்கிய கடந்த ஓராண்டாகவே தொற்றால் மரணித்த உடல்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

இவர்கள் மேற்கொள்ளும் பணிகள் அனைத்தும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டது என்பதால், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் நலன் சார்ந்து மனிதநேயத்துடன் பணிகளை மேற்கொள்ளும் தன்னார்வலர்களையும் தமிழக அரசு முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டுகிறேன்.

முதல் அலையின் போதே இத்தகைய தன்னார்வலர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், கடந்த அரசு அந்தக் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. குறைந்தபட்சம் அவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தக் கூட முன்வரவில்லை.

ஆகவே, தற்போதைய அரசு, தன்னார்வலர்களின் பணிகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு அவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.

அதன்படி முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை வழங்கி உரிய பாதுகாப்பும், போதிய ஊக்கத்தொகையும் வழங்கி, அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

ஏற்கெனவே தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இது தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தியுள்ள நிலையில், மீண்டும் காலத்தின் தேவை கருதி தமிழக முதல்வர் இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x