Last Updated : 19 May, 2021 04:10 PM

1  

Published : 19 May 2021 04:10 PM
Last Updated : 19 May 2021 04:10 PM

புதுச்சேரியில் 7 இடங்களில் நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி ராஜ்நிவாஸில் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்த இணையதளத்தில் பதிவு செய்யும் வசதியைத் தொடங்கி வைத்தார் ஆளுநர் தமிழிசை.

புதுச்சேரி

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இணையத்தில் முன்பதிவை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் 7 இடங்களில் நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்தார்.

உலகம் முழுவதும் கரோனா 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்திய விஞ்ஞானிகளால் கோவாக்சின், கோவிஷீல்டு என்ற 2 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசிகள் முதல் கட்டமாக கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் எனப் படிப்படியாகத் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்குத் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது.

புதுவையில் தடுப்பூசி செலுத்த இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதன் தொடக்கவிழா இன்று ஆளுநர் மாளிகையில் நடந்தது. ஆளுநர் தமிழிசை இணையதள முன்பதிவை (cowin.gov.in) தொடங்கி வைத்தார்.

அதையடுத்து ஆளுநர் தமிழிசை கூறுகையில், "கரோனா தடுப்பூசியைத் தவறாமல் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் கரோனா பரவலைத் தடுக்க முடியும். இதுவரை தடுப்பூசி போட முன்பதிவு செய்யப்படவில்லை.

45 வயதுக்கு மேற்பட்டோர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று ஆதார் அட்டை நகலை அளித்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வர அச்சம் உள்ளவர்கள், அந்தந்தப் பகுதிகளில் பள்ளிகளில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதற்காக இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்பவர்கள் எங்கு, எப்போது தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற தகவல் அனுப்பப்படும். அன்றைய தினம் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. புதுச்சேரியில் நாளை முதல் (மே 20) 7 இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்படப்படவுள்ளது. கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி, கோரிமேடு மகாத்மாகாந்தி அரசு பல் மருத்துவமனை, கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனை, கோரிமேடு அரசு மார்பக மருத்துவமனை, மாஹே அரசு பொது மருத்துவமனை, ஏனாம் அரசு பொது மருத்துவமனை, காரைக்கால் காமராஜர் பொறியியல் கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x