Last Updated : 19 May, 2021 03:12 AM

 

Published : 19 May 2021 03:12 AM
Last Updated : 19 May 2021 03:12 AM

கரோனா பாதிப்பின் உச்சத்தை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை

கரோனா பாதிப்பின் உச்சம் அடுத்தவாரத்தில் பதிவாகலாம் என்று கூறப்படும் நிலையில் அதை எதிர்கொள்ள மாநில அரசு தயாராக இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ‘தி இந்து’ நாளிதழுக்கு அவர் அளித்த நேர்காணல்:

மாநிலம் கரோனாவின் 2-வது அலையை எதிர்கொள்ளும் நேரத்தில் மருத்துவத் துறை அமைச்சராகியுள்ளதை எப்படி உணர்கிறீர்கள்?

பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு சேவை செய்யும் மிகப்பெரிய பொறுப்பும், வாய்ப்பும் எனக்கு கிடைத்துள்ளது. முக்கியமான பிரச்சினையை என்னைநம்பி ஒப்படைத்துள்ள முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை முழுமையாக அர்ப்பணித்து என் மீதான அவரது நம்பிக்கையை நான் நிறைவு செய்வேன்.

ஆக்சிஜன் நிறை மாநிலமாக இருந்த தமிழகம் தற்போது பற்றாக்குறை மாநிலமாக மாறியது ஏன்?

ஆக்சிஜன் உற்பத்தி, திரவஆக்சிஜன் இருப்பு வைப்பதற்கான வசதி மற்றும் அதை பயன்படுத்தும் முறை ஆகிய மூன்றும் முக்கியமானது. தமிழகத்தில் 1,200 டன் ஆக்சிஜன் இருப்பு வைப்பதற்கான வசதி உள்ளது. புதுச்சேரியையும் சேர்த்து நமது ஆக்சிஜன் உற்பத்தி 470 டன் ஆகும். ஆனால், மத்திய அரசு தேசிய ஆக்சிஜன் திட்டத்தில் இங்கிருந்து வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்பியதால்தான் நமக்கு சிக்கல் ஏற்பட்டது. நாம் தற்போது இதற்கு மாற்றாக வேறு மாநிலங்களில் இருந்து வாங்குகிறோம். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டுவிடும். அதேபோல் நோயாளிகளின் தேவைக்கேற்ப ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது. இவற்றால் இந்த வாரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலை சீரடையும்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை பற்றாக்குறை இருப்பது குறித்து?

நோயாளிகளை அனுமதிப்பதில் நிலையான நெறிமுறை பின்பற்றப்படுகிறது. கரோனா கவனிப்புமையங்களில் படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 11,550 படுக்கைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. அதிக பாதிப்புள்ளவர்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும்வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அரசு 7,800 ஆக்சிஜன் படுக்கைகளை தற்போது உருவாக்கியுள்ளது.இவற்றின்எண்ணிக்கையை மே 20-ம் தேதி 12,500 ஆக உயர்த்த திட்டம் உள்ளது.

மருத்துவமனைகளில் பதிவாகும் கரோனா இறப்புகளுக்கும், மயானங்களுக்கு வரும் உடல்களுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளதாக செய்திகள் வெளியாகின்றனவே?

தற்போது மத்திய அரசு மற்றும் ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் படியே கரோனாவால் இறப்பவர்கள் வகைப்படுத்தப்படுகிறார்கள். கரோனாவால் இறந்தால் அதை கரோனா மரணமாகவே அறிவிக்க வேண்டும் என்று அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் நிமோனியா அல்லது மாரடைப்பால் இறக்கும் நிலையில், அதற்கு முன்பு ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் கரோனா நெகட்டிவ் என வந்தால், அவருக்கு கரோனா இல்லை என உறவினரிடம் உடலை ஒப்படைப்பது சரியான நடைமுறையா?

கரோனா தற்போது நோயாக மாறிவரும் நிலையில், தற்போது ஆர்டி-பிசிஆர் பரிசோதனை இல்லாமல் சிடி ஸ்கேன் மூலம் கரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்ட நோயாளிகள் அதிகளவில் வருகின்றனர். ஆர்டி- பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தாலும், கரோனாவால் ஏற்படும் மரணங்கள் தொடர்பாக ஐசிஎம்ஆர் அவ்வபோது வெளியிடும் நெறிமுறைகளை பின்பற்றி வகைப்படுத்துகிறோம். கரோனா மரணம் தொடர்பான தரவுகள் சரியாக இருக்க வேண்டும் என்று முதல்வரும் அறிவுறுத்தியுள்ளார். வாரந்தோறும் மரணங்கள் தொடர்பான தணிக்கைகள் நடைபெறுகின்றன.

கோவேக்சின் தடுப்பூசி முதல் தவணை போட்டவர்களுக்கு 2-ம் தவணை கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறதே?

தமிழகத்துக்கு 12,07,130 டோஸ்கோவேக்சின் மத்திய அரசால் அனுப்பப்பட்டு, அதில் 10,23,043 பயனாளிகளுக்கு தற்போது வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மே 16 வரை 1,70,187 பேர் 2-ம் தவணைக்கு காத்திருக்கின்றனர். மத்திய அரசு தடுப்பூசி வழங்கியதும், 2-ம் தவணைக்காக காத்திருப்பவர்கள் அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும்.

நம் மாநிலத்தில் கரோனா பாதிப்பின் உச்சம் அடுத்த வாரத்தில் ஏற்படும் என்று கூறப்படுகிறதே? அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதா?

ஊரடங்குக்கு முன்னதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான அறிகுறிகள் தற்போது தென்பட தொடங்கியுள்ளது. வரும் வாரத்தில் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக தகவல் வருகிறதே? நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

தனியார் மருத்துவமனை நிர்வாகங்களுடன் முதல்வர் நடத்தியகூட்டத்தில், அரசின் விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளார். இதுதவிர தற்போது தனியார் ஆம்புலன்ஸ்களுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்யப்பட்டு, விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x