Published : 19 May 2021 03:13 AM
Last Updated : 19 May 2021 03:13 AM

காஞ்சிபுரத்தில் 120 படுக்கைகளுடன் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் தொடக்கம்

காஞ்சிபுரம் ஏனாத்தூர் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சித்த மருத்துவ சிறப்பு முகாமை தொடங்கிவைத்துப் பார்வையிட்ட அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன். உடன், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உள்ளிட்டோர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதால், மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், கரோனாவுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்கும் வகையில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, அரசு சார்பில்காஞ்சிபுரம் ஏனாத்தூர் மீனாட்சிமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இந்த மையம்120 படுக்கைகளுடன் செயல்பட உள்ளது.

பின்னர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர், ஆக்சிஜன் சிலிண்டர் வசதி, புதிதாக ஆக்சிஜன் படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ள தற்காலிககரோனா வார்டு பகுதிகளைப் பார்வையிட்டனர். பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போது 7 லட்சம் பேருக்குத் தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இரு தினங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.முதல்கட்டமாக, தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும், தேசிய அளவிலான ஒப்பந்தம் மூலம் 1.50 கோடி தடுப்பூசியும், சர்வதேச அளவிலான ஒப்பந்தத்தில் 3.50 கோடி தடுப்பூசியும் வாங்க உள்ளோம். இவை இரு மாதங்களில் நமக்கு கிடைக்கும்.இந்த தடுப்பூசிகள் கிடைத்தவுடன், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டுவிடலாம்.

காஞ்சிபுரம் தாய்-சேய் நலக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கரோனா வார்டில் முதல்கட்டமாக 100 ஆக்சிஜன் படுக்கைகள் 2 நாட்களில் செயல்பாட்டுக்கு வரும். கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 7,000 ஆக்சிஜன் படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், மக்களவை உறுப்பினர் ஜி.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x