Published : 18 May 2021 06:23 PM
Last Updated : 18 May 2021 06:23 PM
வாணியம்பாடி அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி அடுத்தடுத்து உயிரிழந்ததால், அந்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்டு அங்கு நோய்த் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி மட்டுமல்லாமல், கிராமப் பகுதிகளிலும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம், ஆலங்காயம், மதனாஞ்சேரி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் கரோனா பெருந்தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
இதையொட்டி, நோய்ப் பரவல் அதிகமுள்ள பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தி, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி கிராமத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றுக்கு ஆளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில், சிகிச்சைப் பலனின்றி நெக்குந்தி கிராமத்தைச் சேர்ந்த 5 பேர், கடந்த 2 நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, நெக்குந்தி கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கிராமத்துக்குச் செல்லும் பிரதான பாதையில் தடுப்புகள் அமைத்து ஊருக்குள் யாரும் நுழைய முடியாத வகையிலும், அங்குள்ளவர்கள் யாரும் வெளியே வர முடியாதபடியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நெக்குந்தி கிராமம் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு, வீடு வீடாக மருந்து தெளிக்கும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நெக்குந்தி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர், காய்ச்சல் காரணமாக வீடுகளில் முடங்கியிருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அங்கு மருத்துவக் குழுவினர் முகாமிட்டு நோய் கண்டறியும் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருசிலர், பயத்தின் காரணமாக மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு தர மறுத்து வருகின்றனர்.
இருந்தாலும், வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை உடனடியாக கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதி வழங்கி, அவர்களுக்குரிய சிகிச்சையை அளிக்க மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT