Published : 18 May 2021 06:19 PM
Last Updated : 18 May 2021 06:19 PM
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைத்து, உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என எஸ்.பி. விஜயகுமார் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த மே 24-ம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால், காய்கறி, மளிகை, இறைச்சி உள்ளிட்ட கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறக்கவும், அவ்வாறு திறக்கப்படும் கடைகள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி வியாபாரம் செய்ய வேண்டும் என்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
அதே நேரத்தில், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறி, மளிகைப் பொருட்களை தினந்தோறும் வாங்கிக் கொள்ளாமல், 3 அல்லது 4 நாட்களுக்கு மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும், அவசியம் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், அநாவசியமாக வெளியே சுற்றி நோய்த் தொற்றுக்கு ஆளாவதுடன், குடும்பத்தாருக்கு நோயைப் பரப்பிவிட வேண்டாம் என, பல்வேறு வழிகளில் அறிவுறுத்தி வருகிறது.
ஆனால், இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத பலர், முழு ஊரடங்கு என்று தெரிந்தும் சாலைகளில் வலம் வந்தபடியே இருக்கின்றனர். நகர் முழுவதும் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்துக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டாலும், வெவ்வேறு காரணங்களைச் சொல்லிக்கொண்டு பொதுமக்கள் சாலைகளில் அசுர வேகத்தில் பறப்பதைத் தற்போதும் காண முடிகிறது.
பொதுமக்களின் இதுபோன்ற செயல்களால் கரோனா பெருந்தொற்று குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று 16 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதுவரை 220க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,200 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே நிலை நீடித்தால், அடுத்த வாரத்தில் மருத்துவமனையில் நோயாளிகளுக்குப் படுக்கை வசதி இல்லாமல் போகும் சூழ்நிலை ஏற்படும் என, மாவட்ட சுகாதாரத்துறை எச்சரித்தது.
இதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் இன்று (மே 18) முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார் தலைமையில், திருப்பத்தூர் டிஎஸ்பி பிரவீன்குமார், காவல் ஆய்வாளர்கள் பழனி (தனிப் பிரிவு), பேபி (டவுன்) ஆகியோர், தனித்தனிக் குழுவாகப் பிரிந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, திருப்பத்தூர் பேருந்து நிலையம், ஜின்னா ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, மார்க்கெட் பகுதிகளில் திறந்திருந்த கடைகளில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் அதிக அளவிலான ஆட்களைத் திரட்டி வியாபாரம் செய்த 10 கடைகளுக்கு, போலீஸார் சீல் வைத்து, தலா ரூ.500 அபராதம் விதித்தனர்.
அதேபோல், திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் சத்தியநாதன் உத்தரவின் பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள், திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலை, திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலை, பூ மார்க்கெட், வாரச்சந்தை, காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய சோதனையில், 10 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
பிறகு, பஜார் பகுதியில் அனுமதியின்றி தள்ளுவண்டிக் கடையில் பொருட்களை விற்பனை செய்து வந்த 22 தள்ளுவண்டிகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, மாலையில் பறிமுதல் செய்யப்பட்ட 22 தள்ளுவண்டிகளும் உரியவர்களிடம் எச்சரித்து ஒப்படைக்கப்பட்டது.
''திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நோய்த்தொற்று தொடர்ந்து 500-ஐக் கடந்து வருவதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காத கடைகளுக்குப் பாரபட்சம் பார்க்காமல் சீல் வைத்து, கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். ஊரடங்கு முடியும் வரை காலை 10 மணிக்கு மேல் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித் திரிபவர்களிடம் இருந்து வாகனங்களைப் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும்'' என எஸ்.பி. விஜயகுமார் எச்சரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT