Published : 18 May 2021 05:30 PM
Last Updated : 18 May 2021 05:30 PM
பெல் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் பணியாற்றிய நிபுணத்துவமிக்க ஓய்வுபெற்ற தொழிலாளர்களைக் கொண்டு ஆக்சிஜன் உற்பத்தி ஆலையைப் புதுப்பித்து, மீண்டும் இயக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
திருச்சி பெல் நிறுவனத்தில் கைவிடப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்று, மத்திய அரசிடம் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஏற்கெனவே கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், திருச்சி பெல் நிறுவன நிர்வாக இயக்குநரை இன்று (மே 18) திருச்சி சிவா சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் திருச்சி சிவா கூறியதாவது:
"திருச்சி பெல் நிறுவனத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மீண்டும் புதுப்பித்து, ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு நான் ஏற்கெனவே கடிதம் எழுதினேன். இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடிதம் எழுதியுள்ளார்.
இதனிடையே, ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மீண்டும் புதுப்பித்துச் செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று ஆலை நிர்வாகம் கூறியதாக அறிந்தேன்.
ஆனால், ஆக்சிஜன் உற்பத்தி மையத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி, நிபுணத்துவமிக்க ஓய்வுபெற்ற தொழிலாளர்கள், அந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலையைப் புதுப்பிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும், அதற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மட்டுமே செலவாகும் என்றும், 15 முதல் 20 நாட்களுக்குள் புதுப்பித்துவிடலாம் என்றும் என்னைச் சந்தித்துக் கூறினர்.
இதையடுத்து, அந்தத் தொழிலாளர்களை இன்று அழைத்து வந்து பெல் நிர்வாக இயக்குநரிடம் பேசவைத்தேன். இதற்கு, சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும், கருவிகள் மிகவும் பழுதடைந்துள்ளதாகவும் பெல் அதிகாரிகள் கூறினர்.
கரோனா நோயாளிகள் தனியார் மருத்துவமனையில் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவழிக்கும் நிலையில், ஆலையைப் புதுப்பிக்க அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை மட்டுமே செலவு ஆவதாக, ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் கூறியதையும், இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க பெல் நிர்வாகத்துக்கு அதிகாரம் உள்ளதையும் எடுத்துக் கூறினேன். இதையடுத்து, முயற்சி செய்யலாம் என்று நிர்வாக இயக்குநர் கூறினார்.
இங்கு பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்கள், ஆக்சிஜன் உற்பத்தி ஆலையைப் பார்வையிட்டு, அதில் என்னென்ன சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும், எவ்வளவு செலவாகும் என்று தோராயமாக மதிப்பிட்டு, நிர்வாக இயக்குநரிடம் அறிக்கை அளிப்பர்.
தொடர்ந்து, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுடன் தற்போது பணியில் உள்ள தொழிலாளர்களும் இணைந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலையைப் புதுப்பிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவர்.
கரோனா பரவலால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்குப் போராடி வரும் நிலையில், ஒரு முயற்சி செய்வதில் எவ்விதத் தவறும் இல்லை என்று கூறியதை பெல் நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது. நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது".
இவ்வாறு திருச்சி சிவா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT