Published : 18 May 2021 05:21 PM
Last Updated : 18 May 2021 05:21 PM
மகளிர் சுய உதவிக் குழுக்கள், வியாபாரிகளிடமிருந்து கடன் தொகை வசூலிக்கப்படுவதைத் தள்ளிவைக்க புதுச்சேரி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக அமைப்பாளருமான ஏ.எம்.ஹெச்.நாஜிம் இன்று (மே 18) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர வியாபாரிகளிடமிருந்து 6 மாத காலத்துக்கு இஎம்ஐ வசூலிக்கக் கூடாது என்று அறிவிக்க வேண்டும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கும், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்திலும் தமிழகத்தைப் போலவே ஊரடங்கு அமலில் உள்ளது. சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் முடங்கியுள்ளன. எனவே, புதுச்சேரி மாநில வியாபாரிகளைக் காப்பாற்றும் வகையில், புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியும் பிரதமருக்கும், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் கடிதம் எழுத வேண்டும் என, திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், பணியாற்றும் தொழிலாளர்களிடமிருந்து நிறுவனங்கள் பி.எஃப்., இஎஸ்ஐ பிடித்தம் செய்யக் கூடாது என்ற கோரிக்கையும் தமிழகத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முதல்வர் பொறுப்பேற்று இத்தனை நாட்களாகியும் இன்னும் ஆளுநர் ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பொறுப்புக்கு வந்துவிட்டது என்பதைக் காட்டுகின்ற வகையில், முதல்வர் என்.ரங்கசாமி இத்தகைய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று நம்புகிறேன்.
சுய உதவிக்குழு பெண்களிடம் கடன் தொகையை வசூலிக்க, அவர்களின் வீடுகளுக்கே சென்று நெருக்கடி கொடுத்து, கடுமையான நடைமுறைகளைப் பின்பற்றும் போக்கு இருந்து வருகிறது. இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் கவனம் செலுத்தி, 3 மாத காலத்துக்கு எவ்விதத் தொகையும் வசூலிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முதல்வரும் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் தாமாக வந்து, கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும். இளம் வயதினர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ள சூழலில், வயது வித்தியாசமின்றி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்".
இவ்வறு நாஜிம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT