Published : 18 May 2021 05:12 PM
Last Updated : 18 May 2021 05:12 PM

ராணிப்பேட்டையில் இருந்து 5 மாவட்ட மருத்துவமனைகளுக்கு சிலிண்டர் ஆக்சிஜன் விநியோகம்

கோப்புப் படம்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் இருந்து திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு சிலிண்டர் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தாக்கத்தில் பாதிக்கப்படும் நபர்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல், ஆக்சிஜன் கிடைக்காமல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்களும் திணறி வருகின்றன.

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் விநியோகக் கட்டமைப்பை ஏற்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் ஆக்சிஜன் விநியோகப் பணியைக் கண்காணிக்க மாநில அளவிலான கட்டளை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலமாக சிலிண்டர் ஆக்சிஜனைத் தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்ய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து ஆக்சிஜன் விநியோகத்தை ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ராணிப்பேட்டை மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஆக்சிஜன் விநியோக மையத்தை ஏற்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் காவேரி பார்போனிக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மூலம் சிலிண்டர் ஆக்சிஜன் விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என 5 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிலிண்டர் ஆக்சிஜன் தேவைப்படும் பட்சத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதி குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கோவிட்-19 கட்டுப்பாட்டு அறை தொலைபேசியான 04172-273188 மற்றும் 273166 ஆகிய இரண்டு எண்களைத் தொடர்புகொண்டு பதிவு செய்து சிலிண்டர் ஆக்சிஜனைப் பெற்றுச் செல்லலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x