Published : 18 May 2021 04:49 PM
Last Updated : 18 May 2021 04:49 PM

கோத்தகிரி அருகே பட்டப்பகலில் வீட்டுக்குள் கரடி புகுந்ததால் பரபரப்பு

கோத்தகிரி

கோத்தகிரி அருகே பட்டப்பகலில் வீட்டிற்குள் கரடி புகுந்ததால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாலும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர அனுமதி இல்லாததாலும் சாலைகள் மற்றும் அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதனால் நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியே வந்து குடியிருப்புப் பகுதிகள், சாலைகளில் உலா வந்த வண்ணம் உள்ளன.

கோத்தகிரி, அரவேனு பகுதியில் இருந்து மூணுரோடு செல்லும் சாலையில், பனகுடி கிராமத்தில் ராமன் என்பவர் வீடு உள்ளது. இந்நிலையில் ராமன் வீட்டுக்குள் நேற்று பட்டப்பகலில் கரடி ஒன்று புகுந்தது. தொடர்ந்து கரடி, வீட்டில் உணவு எதேனும் உள்ளதா என்று சுற்றிச் சுற்றிப் பார்த்தது. பின்னர் அந்தக் கரடி அங்கிருந்து சென்றது.

கரடி வீட்டுக்குள் புகுந்த நேரத்தில் வீட்டில் உள்ளவர்கள் மற்றொரு அறையில் அமர்ந்து இருந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இந்தக் காட்சி ராமன் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்தக் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் கோத்தகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறும்போது, ''கோத்தகிரி பகுதியில் பகல் நேரங்களில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் செல்லும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, குடியிருப்புப் பகுதிகளில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் புகுவதைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x