Published : 18 May 2021 02:07 PM
Last Updated : 18 May 2021 02:07 PM

நிவாரண நிதியாகப் பெறப்பட்ட தொகையில் கரோனா மருத்துவ சிகிச்சைக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடைகளிலிருந்து கரோனா சிகிச்சை நடவடிக்கைகளுக்கு ரூ.50 கோடி நிதி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''மருத்துவ நெருக்கடியும், நிதி நெருக்கடியும் இணைந்து சூழும் இந்த நேரத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் மக்கள் தங்களைத் தாங்களே முன்வந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஈகையும், இரக்கமும், கருணையும், பரந்த உள்ளமும் கொண்ட தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கரோனா தடுப்பு முயற்சிகளுக்குக் கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 11 அன்று வேண்டுகோள் விடுத்தார்.

இவ்வாறு வழங்கப்படும் நன்கொடைகள் அனைத்தும் முழுமையாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும், பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் எனவும் முதல்வர் உறுதி அளித்திருந்தார்.

முதல்வர் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். நேற்றுவரை (மே.17) இணைய வழி மூலமாக 21.44 கோடி ரூபாயும் நேரடியாக 39.56 கோடி ரூபாயும் என மொத்தமாக 69 கோடி ரூபாய் நிவாரண நிதியாகப் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வரின் வேண்டுகோளை ஏற்று கரோனா மருத்துவ சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மனமுவந்து நன்கொடை அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தமிழக அரசின் சார்பாக மனமார்ந்த நன்றியை முதல்வர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள் நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறு இதுவரை பெறப்பட்ட 69 கோடி ரூபாயில் இருந்து ரெம்டெசிவிர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காக ரூ.25 கோடியும் மற்ற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை ரயில் போக்குவரத்து மூலமாகக் கொண்டு வருவதற்கு 25 கோடி ரூபாயும் என முதல் கட்டமாக ரூ 50 கோடி ரூபாய் தொகையை செலவிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x