Published : 18 May 2021 12:43 PM
Last Updated : 18 May 2021 12:43 PM
ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:
“தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், ஒரு நிரந்தரத் தீர்வாக நம் மாநிலத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களைத் தொடங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி, மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் மற்றும் கரோனா தொடர்பான மருந்துகள் உற்பத்தியை நம் மாநிலத்திலேயே உருவாக்குவதற்கும், தொழில் கூட்டு முயற்சிகளை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதனடிப்படையில் தொழில் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), மேற்காணும் அத்தியாவசிப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும், உதவிகளையும் அளிக்கும் என்றும், குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுடன், டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் (Joint venture) இவ்வாலைகளை நிறுவுவதற்கு விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கருத்துகளை ((Expression of Interest) 31-5-2021-க்குள் கோரியுள்ளது.
அவ்வாறு பெறப்படும் விருப்பக் கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் உற்பத்தி உட்கட்டமைப்புகளை விரைவில் நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT