Last Updated : 18 May, 2021 08:53 AM

2  

Published : 18 May 2021 08:53 AM
Last Updated : 18 May 2021 08:53 AM

எழுத்தாளர் கி.ரா.வின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்: உறவினர்கள் தகவல்

எழுத்தாளர் கி.ரா.வின் உடல் புதுச்சேரியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கி.ரா.வின் சொந்த ஊரான கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது

கி.ரா. என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1922ம் செப்டம்பர் 19ம் தேதி பிறந்த இவர் கரிசல் இலக்கியத்தின் முன்னோடி என போற்றப்படுகிறார். 1958 ம் ஆண்டு முதல் இறுதி வரை எழுதிக்கொண்டே இருந்தார்.

7ம் வகுப்பே படித்து இருந்தாலும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய இவர் சாகித்திய அகாதமி விருதை பெற்றவர்.

இவரது இலக்கியப் பணிக்கு மரியாதை செலுத்தும் வகையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் அவருக்கு வீட்டை அரசு அளித்துள்ளது . அவருக்கு இரு மகன்கள்.

மூத்த மகன் திவாகரன், இளைய மகன் பிரபி என்கிற பிரபாகரன். கி.ரா.வின் மனைவி கடந்த 2019ல் காலமானார். கி.ரா.வை எழுத்தாளரான இளைய மகன் பிரபியும் ஒளிப்பட கலைஞர் இளவேனிலும் கடைசி நாள் வரை கவனித்து வந்துள்ளனர்.

கரோனா காலத்திலும் அவர் கையெழுத்துப் பிரதியாக "அண்டரெண்டப்பட்சி" என்ற புத்தகத்தை தன் கைப்பட எழுதியுள்ளார். இதை அச்சில் ஏற்றாமல் கைப்பிரதியாகவே வாசகர்கள் படிக்க வேண்டும் என. கி.ரா. விருப்பம் தெரிவித்து வெளியிட்டுள்ளார்.

தான் எழுதாமல் விட்ட கதைகளை தொகுப்பாகக் கொண்டு "மிச்ச கதைகள்" என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

கடந்த டிசம்பர் 26ம் தேதி சுயநினைவுடன் எழுதிக் கொள்வதாக கூறி ஒரு எழுத்து படிவத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதில் தனது படைப்புகள் அனைத்தும் புதுவை இளவேனிலுக்கும், அவரது மூத்த மகன் திவாகரன், இளைய மகன் பிரபி என்கிற பிரபாகரன் ஆகியோருக்கும் தான் சொந்தம் என அவர் கைப்பட எழுதியுள்ளார்.

இந்த மூவரும் தனது படைப்புகள் மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதியை "கரிசல் அறக்கட்டளை" என துவங்கி எழுத்தாளர்களுக்கும் சிறு பத்திரிகைகளுக்கும் தனது பெயரில் பணமுடிப்பும் கூடிய விருதினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது வரை 30 க்கும் மேற்பட்ட புத்தகங்களை கி.ரா. வெளியிட்டார் .தனது 99வது வயதில் "மிச்சக்கதைகள்"என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக எழுத்துப் படைப்புகள் அனைத்தையும் வாசகர் ஒருவருக்கு எழுத்தாளர் எழுதி கொடுத்து இருப்பது

இதுவே முதல் முறை.

கி. ராஜநாராயணனுக்கு 99 வயது. புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார். வயதுமுதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்ற நிலையிலே அவர் இறந்துள்ளார்.லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

"ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதனின் தேவை அவசியம். பேச்சுத் தான் மனிதனின் பலமாக இருக்கிறது. பேச்சுத் துணை என்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் கரோனாவால் மனிதர்களை சந்திக்காமல் இருப்பது பெருந்துயரம். இது போன்ற பெரும் நோய்களை உலகம் கண்டிருக்கிறது. இதை மனிதன் முறியடித்து விடுவான்" என நம்பிக்கையுடன் ஒருமுறை கி.ரா. குறிப்பிட்டார்.

கி.ரா.வின் உடல் புதுச்சேரியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதாக அவரது மகன் பிரபாகரன் தெரிவித்தார். கி.ரா.வின் சொந்த ஊரான கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது என்று பிரபாகரன் தகவல் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x