Published : 17 May 2021 08:04 PM
Last Updated : 17 May 2021 08:04 PM
சிவகங்கை மாவட்டத்தில் வாழ்வாதாரத்திற்காக கொடுத்த நிவாரணத் தொகையை, பெண்களிடமிருந்து கடனுக்காக தனியார் நிதி நிறுவனங்கள் வசூலித்துச் செல்வதாக ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் திமுக புகார் தெரிவித்துள்ளது.
பெண்கள் தங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சுயஉதவிக்குழுக்கள் அமைத்து வங்கிகள் மட்டுமின்றி, தனியார் நிதி நிறுவனங்களிடமும் கடன் பெற்று தொழில் செய்து வருகின்றனர்.
கடன் தவணைத் தொகையை வாரந்தோறும் நிதி நிறுவனங்களிடம் செலுத்தி வருகின்றனர். தற்போது கரோனா ஊரடங்கால் வேலையின்றி வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
இதனால் அவர்களால் கடன் தவணைத் தொகையை செலுத்த முடியவில்லை. இந்நிலையில் கரோனா நிவாரணத் தொகையாக தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கி வருகிறது.
இத்தொகையை பெண்கள் வாங்கியதும், அத்தொகையை தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தவணைக்காக வசூலித்து செல்வதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து சிவகங்கை திமுக நகரச் செயலாளர் துரைஆனந்த் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் புகார் மனு கொடுத்துள்ளார். மேலும்
அவர் மனுவில் கூறியிருப்பதாவது: கரோனா ஊரடங்கால் முடங்கியவர்களின் வாழ்வாதாரத்திற்காக தான் நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது. அதையும் தனியார் நிதி நிறுவனங்கள் வசூலித்து செல்கின்றனர். இதனால் பெண்கள் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதையடுத்து தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தவணைத் தொகையை வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...