Published : 17 May 2021 07:56 PM
Last Updated : 17 May 2021 07:56 PM
செங்கல்பட்டில் 9 ஆண்டுக்கு முன்பு நிறுவப்பட்டு இன்னும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் இருக்கும் எச்எல்எல் தடுப்பூசி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர டெண்டர் விடப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி பெல் நிறுவனத்தில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க வேண்டும், செங்கல்பட்டில் அமைக்கப்பட்டுள்ள எச்எல்எல் தடுப்பூசி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனக் கோரி மதுரையைச் சேர்ந்த வெரோணிகா மேரி, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பெல் நிறுவனம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், திருச்சி பெல் நிறுவனத்தில் இயந்திரங்களுக்கு தேவையான ஆற்றலை அளிக்கவே 1981-ல் ஆக்சிஜன் தயாரிப்பு பிளான்ட்கள் தொடங்கப்பட்டன.
இந்த பிளான்ட்களுக்கு தேவையான பொருட்கள், உதிரி பாகங்கள் கிடைக்காததால் 2003-ல் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஹரித்துவார் மற்றும் போபால் பெல் நிறுவனங்களில் 30 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரித்து மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது எனக் கூறப்பட்டிருந்தது.
மத்திய அரசு சார்பில், செங்கல்பட்டு எச்எல்எல் தடுப்பூசி வளாகத்தில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. மே 21 டெண்டர் விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
மாநிலங்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் இல்லாமல், தொற்றாளர்கள் எண்ணிக்கையில் தடுப்பூசி, கரோனா மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன எனத் தெரிவிக்கப்ப்டடது.
இதையடுத்து விசாரணையை மே 20-க்கு தலைமை நீதிபதி ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT