Published : 17 May 2021 07:34 PM
Last Updated : 17 May 2021 07:34 PM
'கரோனாவிற்கு சுய சிகிச்சை செய்திடக் கூடாது. நீராவி நுகர்தல் சிகிச்சை முறை கரோனா சிகிச்சைக்குக் கூடாது' போன்ற தமிழக அரசின் அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
''கரோனா கிருமிகளைக் கொல்லும் எனப் பொது இடங்களில் மொத்தமாக நீராவி நுகர்தல் சிகிச்சை அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா கிருமி அழியாது, மாறாக கரோனா பரவலுக்கே வழிவகுக்கும். இதை யாரும் பின்பற்றக் கூடாது, மருத்துவர்கள் ஆலோசனை இன்றி வாட்ஸ் அப், வலைதளங்களில் வரும் சிகிச்சைகளைத் தாமாக யாரும் பின்பற்றக் கூடாது'' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வேண்டுகோளாக வைத்திருந்தார்.
இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை:
''தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கரோனா பரவாமல் தடுத்தல், கரோனாவிலிருந்து காத்துக் கொள்ளல், கரோனாவிலிருந்து குணமாக கரோனா வைரஸைக் கொல்லுதல் என்ற பெயரில் நீராவி நுகர்தல் சிகிச்சை முறை பரவி வந்தது.
இந்த மருத்துவ முறை அறிவியல் அடிப்படையற்றது. நீராவி நுகர்தல் சிகிச்சை முறை கரோனா பரவலையோ அல்லது கரோனா வைரஸைக் கொல்லவோ பயன்படாது. மாறாக இது கரோனா வைரஸ் பலருக்கும் மிக வேகமாகப் பரவும் வாய்ப்பையே ஏற்படுத்தும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கூறிவந்தது.
இத்தகைய அறிவியல் பூர்வமற்ற முறைகளைக் கைவிட வேண்டும் என்றும் கோரி வந்தது. இந்நிலையில் தமிழக அரசு இத்தகைய மருத்துவ முறை கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், மருத்துவர்களின் ஆலோசனை இன்றி, சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்பி, சுயமாக சிகிச்சைகளைப் பொதுமக்கள் மேற்கொள்ளக் கூடாது என்ற அறிவுறுத்தலையும் வெளியிட்டுள்ளது. இதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மனமார வரவேற்கிறது. பாராட்டுகிறது.
கரோனாவைத் தடுப்பதற்கும், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி காப்பதற்கும் அறிவியல் பூர்வமாக நிரூபணமான மருத்துவ நடைமுறைகளே உதவிகரமாக இருக்கும். இதை உலக நல நிறுவனம் வலியுறுத்திக் கூறிவருகிறது. எனவே, தமிழக அரசு, அறிவியல் ரீதியான நிரூபணமான மருத்துவ முறைகளை மட்டுமே ஊக்கப்படுத்த வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பொதுமக்கள் நலன் கருதி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
மருத்துவக் கல்வி உட்பட கல்வியைக் காவிமயமாக்கும், கார்ப்பரேட் மயமாக்கும், கல்வியில் மாநில உரிமைகளை முற்றிலும் ஒழித்துக் கட்டும், குலக் கல்வி முறையை மீண்டும் திணிக்கும், சாதி அடிப்படையிலான பரம்பரை தொழிலை மறைமுகமாக ஊக்கப்படுத்தும், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்திருப்பது வரவேற்புக்குரியது. பாராட்டுக்குரியது.
கல்வியில் மாநில உரிமையையும், சமூக நீதியையும் காக்கும் வகையில் தமிழக அரசு உறுதியுடன் செயல்படுவதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மனமாரப் பாராட்டி வரவேற்கிறது''.
இவ்வாறு மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT