Published : 17 May 2021 05:43 PM
Last Updated : 17 May 2021 05:43 PM

ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களுக்கு வீடு வீடாக மளிகை, காய்கறி விற்பனை: தமாகா யுவராஜா வேண்டுகோள்

சென்னை

ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களுக்கு வீடு வீடாக மளிகை மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பணிகளை மாவட்ட நிர்வாகம் தொடங்க வேண்டும் என்று தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர், ஈரோடு மாநகராட்சி ஆணையருக்கு யுவராஜா இன்று அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

''இந்தியா முழுவதும் கரோனா இரண்டாவது அலை நாம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாகவும் அதே வேளையில் பல உயிர்களையும் பறிக்கக்கூடிய சூழலும் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்கும் நோக்கில் ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மருத்துவர்கள், காவல் துறையினர் மற்றும் முன்களப் பணியாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து 24 மணி நேரமும் தொடர்ந்து சேவை செய்து வருகின்றார்கள் அவர்களுக்கு எங்களது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசால் இன்று பல கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதியைப் பொறுத்தவரையில் லட்சக்கணக்கான மக்கள் வாழக்கூடிய பகுதி. குறிப்பாக அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதி. கரோனா அதிகம் பரவக்கூடிய பகுதியாக ஈரோடு மாநகர் உள்ளது. இப்பகுதியில் 6 மணி முதல் 10 மணி வரையில் மளிகை மற்றும் காய்கறிக் கடைகள் செயல்பட்டாலும் கூட மக்கள் அங்கு சென்று பொருட்களை வாங்க அச்சப்படுகிறார்கள். மறுபுறம் கடைகளில் அதிகக் கூட்டங்கள் கூடிய காட்சியை இன்று காலையில் நாங்கள் பார்த்தோம்.

இந்நிலையில் அவர்களுக்கு உதவிகரமாகச் செயல்படும் நோக்கிலும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் உள்ள 36 வார்டுகளுக்கும் கைவண்டி மற்றும் சிறு வண்டிகள் மூலமாக மளிகை மற்றும் காய்கறிகளைக் கொண்டு செல்லும் பணிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தொடங்க வேண்டும். அதற்கு ஆகும் செலவில் ஒரு பங்கினை ஊரடங்கும் முடியும் வரை தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளோம்''.

இவ்வாறு யுவராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x