Published : 17 May 2021 04:57 PM
Last Updated : 17 May 2021 04:57 PM
சென்னையிலும், பின்னர் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் சோதனைகளை அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலமும், தினசரி போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை 3 லட்சமாக அதிகரிப்பதன் மூலமும் கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:
“தமிழ்நாட்டில் சுமார் இரு மாதங்களுக்குப் பிறகு தினசரி கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று சற்று குறைந்திருக்கிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே தினசரி கரோனா தொற்று இறங்குமுகமாக உள்ளது. இது மகிழ்ச்சியடைவதற்கான தருணம் இல்லை என்றாலும் கூட, விரைவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தி விட முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கும் புள்ளிவிவரமாகும்.
தமிழ்நாட்டில் தினசரி கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று 33,181 ஆக குறைந்துள்ளது. இது நேற்று முன்நாளின் தொற்று எண்ணிக்கையான 33,658-ஐ விட 477 குறைவு ஆகும். அதேபோல், சென்னையில் தினசரி கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று 6,247 ஆகக் குறைந்துவிட்டது. நேற்று முன்நாள் சென்னையில் இந்த எண்ணிக்கை 6,640 ஆக இருந்த நிலையில் நேற்று 393 குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த 12ஆம் தேதி 7,564 ஆக இருந்த கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் சென்னையில் கரோனா தொற்று 1,317 குறைந்துள்ளது. சென்னையிலும், தமிழ்நாட்டிலும் கரோனா சோதனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையிலும் தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
சென்னையில் கரோனா தொற்று விகிதமும் 23 விழுக்காட்டிலிருந்து குறைந்து 20 விழுக்காட்டிற்கும் கீழ் வந்திருப்பது நிம்மதியளிக்கிறது. இத்தகைய தருணத்தில் தமிழக அரசு நோய்த்தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் சென்னையில் கரோனா தொற்றை விரைவாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். அதற்கான முதல் பணி சென்னையில் கரோனா சோதனைகளை அதிகப்படுத்துவதுதான். சென்னையில் கடந்த சில வாரங்களாக சராசரியாக தினசரி 30 ஆயிரம் பேருக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் சோதனை செய்யப்படாமல் கரோனா தொற்றுடன் நடமாடிக் கொண்டிருப்போரின் எண்ணிக்கை பல லட்சங்கள் இருக்கும். கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் சராசரியாக 1.8 பேருக்கு நோயைத் தொற்றச் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தகைய சூழலில் அதிக எண்ணிக்கையில் சோதனைகளைச் செய்யும்போது நோயால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக அடையாளம் கண்டு குணப்படுத்த முடியும். அதன் மூலம் அவர்கள் வழியாகப் பிறருக்கு நோய் பரவுவதைத் தடுக்க முடியும்.
சென்னையில் கரோனா சோதனை எண்ணிக்கையை தினசரி 50,000 ஆக அதிகரிக்க வேண்டும். சோதனைகளை அதிகரிக்கும்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பது போன்ற தோற்றம் ஏற்படும். எனினும் பாதிக்கப்பட்டவர்களை அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்து விடுவதால், அவர்களால் மற்றவர்களுக்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.
சென்னையில் பல்வேறு இடங்களில் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருவதால், அதிக சோதனைகளின் காரணமாக கூடுதலாக நோயாளிகள் கண்டறியப் பட்டாலும் கூட அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது. அதே நேரத்தில் சென்னையில் நோய் பாதிப்பையும், நோய் பரவலையும் விரைவாக முடிவுக்குக் கொண்டுவர முடியும்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் அதிக அளவிலான சோதனைகளைச் செய்ததன் மூலம் தான் கரோனா பரவலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடிந்தது. அதன் பின்னர் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகளைச் செலுத்தியதன் பயனாகவே புதிய தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க முடிந்தது.
அதேபோல், சென்னையிலும், பின்னர் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் சோதனைகளை அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்களை விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் கரோனாவை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதேபோல் தினசரி போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையையும் 3 லட்சமாக அதிகரித்து கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT