Published : 17 May 2021 02:55 PM
Last Updated : 17 May 2021 02:55 PM

நெற்களஞ்சியமான தஞ்சையைக் கல்விக் களஞ்சியமாக்கியவர்: துளசி அய்யா வாண்டையார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை

“ஆண்டுக்கு ஆயிரம் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச உயர் கல்வியை வழங்கி வரும் புஷ்பம் கலை அறிவியல் கல்லூரி மூலம் 60 ஆண்டுகளைக் கடந்துவிட்ட கல்விப் பணியில் நெற்களஞ்சியமான தஞ்சை தரணி அறிவுக் களஞ்சியமாகவும் வளர்ந்து செழித்துள்ளது” எனத் துளசி அய்யா வாண்டையார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தி:

“டெல்டா மாவட்ட மக்களால் கல்விக் கண் திறந்த வள்ளல் எனக் கொண்டாடப்படும் சுதந்திரப் போராட்ட வீரரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினருமான துளசி அய்யா வாண்டையார் மறைவெய்திய செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரம் கொண்டேன். இவரது பாரம்பரியத்தினரால் தொடங்கப்பட்ட பூண்டி வீரையா வாண்டையார் நினைவு புஷ்பம் கலை அறிவியல் கல்லூரி மூலம் டெல்டா மாவட்டங்களில் அடுத்தடுத்த தலைமுறை இளைஞர்கள் கல்வி அறிவு பெற்றனர்.

துளசி அய்யா வாண்டையார் தாளாளராக இருந்த பூண்டி புஷ்பம் கலை அறிவியல் கல்லூரி மூலம் ஆண்டுக்கு ஆயிரம் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச உயர் கல்வியை வழங்கி வருகின்றனர். 60 ஆண்டுகளைக் கடந்துவிட்ட இவர்களது கல்விப் பணியில் நெற்களஞ்சியமான தஞ்சை தரணி அறிவுக் களஞ்சியமாகவும் வளர்ந்து செழித்துள்ளது என்றால் மிகையாகாது.

துளசி அய்யா வாண்டையார் 1991 முதல் 96ஆம் ஆண்டுகளில் மக்களவை உறுப்பினராக இருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினருக்கு அரசு வழங்கும் சலுகைகள் அனைத்தையும் மறுத்துவிட்டுத் தன் சொந்த செலவிலேயே டெல்லிக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்த தகைமையாளர் ஆவார். இறுதிவரை காந்தியடிகளின் ஆத்மார்த்த சீடராக விளங்கிய வந்த துளசி அய்யா வாண்டையாரின் மறைவு டெல்டா மாவட்டத்திற்கு மட்டுமின்றித் தமிழகத்திற்கே பேரிழப்பாகும்.

துளசி அய்யா வாண்டையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், டெல்டா மாவட்டத்து மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x