Published : 17 May 2021 12:56 PM
Last Updated : 17 May 2021 12:56 PM

முதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு: கரோனா நிவாரண நிதி வழங்கினார்

சென்னை

முதல்வர் ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கரோனா நிவாரண நிதியை வழங்கினார். அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று இதுவரை இல்லாத அளவில் அதிகரித்து வருவதால் படுக்கைகள், ஆக்சிஜன் இருப்பு ஆகியவற்றில் கடும் தட்டுப்பாடு உள்ளது.

தமிழக அரசு, கரோனா தொற்று அதிகரிப்பால் கடும் மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. இதற்குப் பொதுமக்கள், வாய்ப்புள்ளவர்கள் தாமாக முன்வந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியளிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்திருந்தார்.

முதல்வர் வைத்த கோரிக்கையை ஏற்று கோடிக்கணக்கான ரூபாய் முதல், தங்களால் இயன்ற நிதி வரை கோடீஸ்வரர்கள், பெரும் நிறுவனங்கள், அரசியல், சினிமா, வெளிநாடுவாழ் தமிழர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் நிதி அளித்து வருகின்றனர். சாதாரண கடைநிலை ஊழியர்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கினர். குழந்தைகள் தங்கள் சேமிப்புப் பணத்தை வழங்கினர்.

ஆசிரியர் அமைப்பினர் தங்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக அறிவித்துள்ளனர். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ரூ.1 கோடியும், தனது ஒரு மாத ஊதியத்தையும் வழங்கினார். அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் தொகுதி நிதியை வழங்குவதாக அறிவித்தன.

திரையுலகினர் தங்கள் பங்களிப்பாகத் தொடர்ச்சியாக நிதி வழங்கிவரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல்வர் ஸ்டாலினைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். தனது பங்காக கரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கினார்.

பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். தனது நிதியாக ரூ.50 லட்சம் வழங்கியதாகத் தெரிவித்த ரஜினி, ''கரோனா எனும் உயிர்க்கொல்லி நோயை ஒழிக்க அரசாங்கம் கொண்டுவந்த கட்டுப்பாடுகளைப் பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும். அப்போதுதான் கரோனா எனும் நோயைக் கட்டுப்படுத்த முடியும். இது பொதுமக்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள்'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x